விசா இல்லாத இலங்கைத் தமிழர்களும் நாடு கடத்தப்படுவார்களா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
சட்டவிரோதமாக குடியேறியவர்களால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களைக் கண்டறிந்து நாடுகடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
உலகின் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா பல நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதனால் அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் பக்கத்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுவதுடன் அவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகிறார்கள்.
மேலும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தீவிரவாத அமைப்புகள் தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது எனவும் எனவே, சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினரை அடையாளம் கண்டு, அவர்களை நாடு கடத்துவதற்கு ஏதுவாக, மாவட்ட அளவில் ஒரு குழுவை அமைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாஸ் இனத்தவர்கள் இந்தியாவில் தங்கி இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. எனினும் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியாஸ் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக மற்றொரு புள்ளி விவரம் கூறுகிறது. இவர்கள் பெரும்பாலும் ஹைதராபாத், உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர். இதுபோல, வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 2 கோடி பேர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருப்பதாக, 2016-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இந்த தகவலில் இலங்கைத் தமிழர்கள் பற்றி குறிப்பிடப்படாவிடினும், சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களை இனம்கண்டு நாடுகடத்துங்கள் என உத்தரவிட்டமை விசா இன்றி தங்கியிருக்கும் அனைவருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.