நாட்டில் ஏற்பட்டுள்ள கழிவுகளை அகற்றுதல் தொடர்பான பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிலையான தீர்வொன்றினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்படுவதுடன், இவ்வருட இறுதிக்குள் 09 மாகாணங்களிலும் கழிவு முகாமைத்துவத்திற்கான உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி நிறைவுசெய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை முறைமைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.
கொழும்பு மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் கழிவுகளை வெளியேற்றும் செயற்பாடுகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளிடம் விசாரித்ததுடன், சுற்றாடல் பாதுகாப்பு தேசிய செயற்திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவத்தை முறைமைப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குடிசை வீடுகள் காணப்படும் பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பொதுமக்களை அறிவூட்டும் பிரசார நடவடிக்கைகளை மேலும் விருத்தி செய்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவத்தை செயற்படுத்தல் மற்றும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.