குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:-
வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கியஸ்தர் சன்னா என்ற பிரசன்னாவைக் கைதுசெய்ய, இலங்கை பொலிஸ் திணைக்களம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆவா குழுவின் முக்கிய புள்ளிகள், வெளிநாட்டில் இருந்தவாறு குற்றச்செயல்களை நெறிப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், ஏற்கனவே இந்தியாவில் திருச்சியில் கடவுச் சீட்டு இன்றி கைது செய்யப்பட்ட இருவர் ஆவா குழுவின் செயற்பாட்டாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகளை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஆவா குழுவின் செயற்பாடுகள் குறித்து பொலிஸ் அதிகாரிகளிடம் அறிக்கை கோரியுள்ளார். அதன்போது இடம்பெற்ற உரையாடலில் ஆவா குழுவின் செயற்பாடுகள் வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொடர்புபடுவதாகவும், இன்றபோலின் உதவியை கோருவது தொடர்பில் ஆலோசிக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் அண்மைய காலமாக தொடரும் வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்னணியில் ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இதுவரை சுமார் 15 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..