கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம் 90 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படுகிறது என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
33 மீற்றர் நீளமும், 4.2 மீற்றர் அகலமுடைய குறித்த பாலத்தின் கொங்றீட் பணிகளுக்கு 35 மில்லியன் ரூபாவும், இரும்பு பாலத்திற்கு 55 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் கடந்த சில வருடங்களுக்கு முன் ஜக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் முன்னைய அரசின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இடையில் ஏற்பட்ட பருவ மழை காரணமாக எட்டு மாதங்களாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது. வரும் ஒக்ரோபர் மாதம் பணிகள் முழுமையாக நிறைவுப்பெறவுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி தெரிவித்தார்.
பிரதேச மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைவாக 90 மில்லியன் ரூபா பெறுமதியில் ஊற்றுப்புலத்திற்கு பாலம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.