252
ஸ்ரீலங்காவின் 21ஆவது கடற்படைத் தளபதியாக கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதியாக செயற்பட்ட அட்மிரல் சின்னய்யா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலத்தில், அதாவது மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சின்னய்யா அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டார் என்றும் தற்போது அவருக்கு இலங்கையின் கடற்படைத் தளபதி பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. தமிழர் ஒருவர் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டமை கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வு என்பதுடன் அதன் பின்னால் உள்ள நுண் அரசியல்கள் குறித்த உரையாடல்களும் வலுப்பெற்றுள்ளன.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் முதலில் தமிழர் ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மத்திய வங்கியின் ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டார். தற்போது கடற்படைத் தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் ஒருவர் பிரதம நீதியரசராக இருந்த காலத்தில், தமது நிலத்திற்காகவும் தமது உறவுகளின் விடுதலைக்காகவும் இனப்படுகொலைக்கான நீதிக்காகவும் ஈழத் தமிழ் மக்கள் போராடினார்கள். தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்தா? இல்லை.
மாறாக இத்தகைய நியமனங்கள் தமிழ் மக்களுக்கான நீதியை மறுக்கவும் தமிழ் மக்களின் உரிமையை மறுக்கவுமே மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் எதிர்கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் பதவி வகிக்கிறார். தமிழ் மக்களின் இன்றைய பிரச்சினைகள் தொடர்பில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், காணி விடுவிப்பு விகாரங்கள் தீர்க்கப்பட்டனவா? நீதி விசாரணை முடக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இலங்கையில் ஆட்சி புரியும் அரசு, காலம் காலமாக பதவிகளில் தமிழர்களை இருத்துகின்றபோது, தமது அரசுக்குச் சார்பாகவும், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவுமே செயற்படும் நபர்களை தேர்வு செய்கின்றது. சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவு செய்யப்பட்டமைக்கு ஒப்பான நிகழ்வுகளே இடம்பெற்றுள்ளன. இதனால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளும் அவர்களின் போராட்டத்தில் ஏற்பட்ட தாக்கங்களும் அதிகமானவை.
சிங்களப் பேரினவாத ஆதிக்க மனப்போக்கிற்கு ஒத்துழைக்கும் மனம் கொண்டவர்கள்தான் ஸ்ரீலங்காவில் பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்பதும், அதனால் தமிழ் மக்களுக்கு பாதிப்பே தவிர, எந்த நன்மையும் கிட்டியதில்லை என்பதற்கு இப்படிப் பல நிகழ்வுகள் உதாரணமாகின்றன. அட்மிரல் சின்னய்யா விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது கடுமையாகப் பணியாற்றியவராம். தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இலங்கை இராணுவக் கட்டமைப்பை பாதுகாக்கும் நபர் என்தனாலேயே அவருக்கு இந்தப் பதவி வழங்கப்படுகின்றது என்பது வெளிப்படையானது.
மகிந்த ராஜபக்ச, யுத்தம் முடிந்த நாட்களில் தமிழ் இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கினார். வறிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் இதில் இணைக்கப்பட்டனர். இவர்கள் இராணுவப் பண்ணைகளிலும் இராணுவ முகாங்களிலும் கூலிகளாக வேலை பார்த்து வருகின்றனர். எதற்காக தமிழ் இளைஞர் யுவதிகள் இவ்வாறு நடாத்தப்படுகிறார்கள் என்பது குறித்து விளக்கம் ஏதும் தேவையில்லை. அதைப்போல தமிழர் ஒருவருக்கு இராணுவப் பதவி ஒன்றை வழங்கிழயுள்ளதாக இலங்கை அரசு காட்டிக் கொள்ள முடியற்சிக்கலாம்.
இலங்கை அரசு, அதன் இராணுவ எந்திரத்தைக் கொண்டு, ஈழத் தமிழ் மக்கள்மீது இனப்புடுகொலை புரிந்தது, காணாமல் ஆக்கியது, அதற்கான நீதி முன்வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் இக் கால கட்டத்தில் இதுபோன்ற தந்திரோபாயங்களில் இவ் அரசு ஈடுபடுகின்றது. தமிழர் ஒருவருக்கு கடற்படை தளபதி பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து மகிந்த ராஜபக்ச அணியும் அரசியல் செய்யக்கூடும். இங்கு பிரச்சினை தமிழரோ, சிங்களவரோ என்பதல்ல, பௌத்த சிங்களப் பேரினவாத – சிறுபான்மையினரை ஒடுக்கும் மனநிலை கொண்ட அரசியல் இராணுவக் கட்டமைப்பே பிரச்சினைக்குரியது. ஆனால் அக்கட்டமைப்பை பலப்படுத்தும் செயல்களே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
தெருக்களில் குந்தியிருந்து, பிள்ளைகளுக்காகவும் பிள்ளைகளின் நீதிக்காகவும் நிலத்திற்காகவும் ஈழத் தமிழ் மக்கள் போராடுகின்றனர். ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் பாரா முகமாகவும் கள்ள மௌனத்துடனும் காலம் கடத்துகின்றது இலங்கை அரசாங்கம். தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசின் உயர் பதவிகளைக் கோரி போராடவில்லை. அவர்கள் தமது நிலத்தையும் அதன் உரி்மையையும் கோரியே போராடுகின்றனர் என்பதை இவ் அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love