குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீருடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டுமென கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னய்யா தெரிவித்துள்ளார். கடற்படைத் தளபதியாக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படை சீருடைகளை அணிந்து கொண்டு கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட முடியாது எனவும் அவ்வாறு ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில தரப்பினர் தம்மை அமெரிக்க முகவர் என பிரச்சாரம் செய்து வருவதாகவும் அந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என தெரிவித்துள்ள அவர் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கடற்படையில் இணைந்து கொண்ட தாம் பல்வேறு சவால்களை வென்று இந்த நிலைக்கு முன்னேறியுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீளவும் யுத்தம் ஏற்படக்கூடிய சாத்தியமில்லை என தனிப்பட்ட ரீதியில் தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ள அவர் புலிகளின் யுத்தக் கப்பல்களை இல்லாதொழித்த தாம் பிரபல்யம் அடையவில்லை எனவும், அவ்வாறு பிரபல்யம் அடைந்திருந்தால் புலிகளிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருக்க நேரிட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்திருந்தாலும் அச்சுறுத்தல்கள் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.