குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் மாடு வெட்டும் மடுவத்தில் உரிய அனுமதியின்றி மாடுகளை வெட்டியவா்கள் மீது சுகாதார பிரிவினா் சட்ட நடவடிக்கை எடு்க்கவுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை இறைச்சிக்காக மாடுகள் வெட்டும் கிளிநொச்சி கோரக்கண்கட்டு மடுவத்தில் திடீர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்ட கிளிநொச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு அங்கு மாடுகள் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளதனை அறிந்துள்ளனா்.
ஆறு மாடுகள் வெட்டப்பட்ட நிலையிலும், நான்கு மாடுகள் வெட்டுவதற்கு தயாரான நிலையிலும் காணப்பட்டுள்ளன. இதில் இரண்டு மாடுகள் பசு மாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் குறித்த பசுமாடுகள் இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டுவரப்பட்டது அல்ல என மடுவத்தில் இருந்தவா்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் தெரிவித்துள்ளனா். இருந்த போதும் குறித்த இரண்டு பசுமாடுகளையும் சுகாதார பிரிவினா் அங்கிருந்து மீட்டுச் சென்றுள்ளனா்
இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அங்கு பிரசன்னமாகியிருக்க வேண்டும் அல்லது அவா்களினால் வெட்டுவதற்குரிய மாடு என சிபார்சு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கோரக்கண்கட்டு மடுவத்தில் இன்றைய தினம் இவை எதுவுமே பின்பற்றபட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு பசுமாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதாக இருந்தால் கால்நடை மருத்துவா் குறித்த பசுமாட்டினால் இனி பயனில்லை என உறுதிப்படுத்த வேண்டும் இதுவே நடைமுறை. ஆனால் இந்த நடைமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படாது பல நாட்களாக இ்வ்வாறு சட்டத்திற்கு முரணாக மாடுகள் வெட்டப்பட்டு வந்திருக்கின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த இடம் சுகாதார சீர்கேடுகள் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த நிலையில் இவா்கள் மீது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொதுச் சுகாதார பிரிவினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.