169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
இரு நோயாளிகளை கொலைசெய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜேர்மனியின் ஆண் தாதியொருவர் மேலும் 84 பேரை கொலை செய்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நைல்ஸ் எச் என குறிப்பிடப்படும் அந்த ஆண் தாதி தான் அவ்வாறு பல நோயாளிகளிற்கு ஆபத்தான மருந்துகளை வழங்கியதை ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள காவல்துறை வட்டாரங்கள் எனினும் அனைத்து சம்பவங்கள் குறித்து நினைவில்லை என தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளன.
ஜேர்மனியின் வடபகுதியிலுள்ள மருத்துவமனையொன்றில் பணியாற்றி வந்த அவர் நோயாளிகளிற்கு வேண்டுமென்றே ஆபத்தான மருந்தை வழங்கிய பின்னர் அவர்களை காப்பாற்றி தன்னை சாதனையாளராக சித்தரிக்க முயன்றார் என ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2015 இல் இவர் மீது நீதிமன்றமொன்று கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்த நிலையிலேயே தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட ஆண் தாதியினால் மருந்துசேவை வழங்கப்பட்ட நிலையில் மரணித்த 134 உடல்களை தோண்டியெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அந்த நபர் ஐந்து வகையான மருந்துகளை பயன்படுத்தியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 41 பேரிற்கு வழங்கப்பட்ட மருந்துகள் குறித்த விசாரணைகள் பூர்த்தியடையாதன் காரணமாக மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பது பின்னர் தெரியவருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த கொலைகள் குறித்து அறிந்திருந்தும் அதனை தடுத்து நிறுத்த தவறிய ஏழு பேரிற்கு எதிராகவும் அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
Spread the love