Home இலங்கை புங்குடுதீவு மாணவியை படுகொலை செய்தது கடற்படை. ஆனால் பொலிசார் எம்மை குற்றவாளிகள் என அறிவித்தனர்:-

புங்குடுதீவு மாணவியை படுகொலை செய்தது கடற்படை. ஆனால் பொலிசார் எம்மை குற்றவாளிகள் என அறிவித்தனர்:-

by admin

நான்காம் எதிரி மன்றில் சாட்சியம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

84kb cropped version

புங்குடுதீவு மாணவியை கடத்தி, வன்புணர்வுக்கு உட்படுத்தி, படுகொலை செய்தது கடற்படையே ஆனால் நாம் தான் அதனை செய்தோம் என ஊர்காவற்துறை பொலிசார் முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி கட்டி ஊர் முழுவதும் அறிவித்தனர் என மாணவி கொலை வழக்கின் நான்காம் எதிரி மகாலிங்கம் சசீந்திரன் மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள்  இன்றைய தினம் திங்கட்கிழமை  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
சட்டத்தரணிகள் முன்னிலை. 
வழக்கு தொடுனர் தரப்பில் இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த்,  மற்றும் சட்டத்தரணி  மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் தரப்பில்  1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன ,  மற்றும் சட்டத்தரணி லியகே  ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம்
ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்றைய தின சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
வழக்கேட்டில் திருத்தம். 
முன்னதாக வழக்கேட்டில் சில சொற்திருத்தங்களை மேற்கொள்ள பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில் விண்ணப்பம் செய்தார். அதற்கு மன்று அனுமதி அளித்ததை அடுத்து , திருத்தங்கள் செய்யப்பட்டன.
சட்ட வைத்திய அதிகாரி மீள சாட்சியம் அளிக்க அழைப்பு. 
அதனை தொடர்ந்து , எதிரிகள் தரப்பில் சாட்சியமாக சட்ட வைத்திய அதிகாரியை மன்றுக்கு அழைப்பதற்கு 5ஆம் எதிரி தரப்பு சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி கோரி இருந்தார். அதற்கு வழக்கு தொடுனர் தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது
அதனை அடுத்து  5ஆம் எதிரி தரப்பு சட்டத்தரணி  மன்றில் தெரிவிக்கையில் , சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சி பதிவுகள் முடிவடைந்த பின்னர் தான் ஜின்டேக் நிறுவன விஞ்ஞானியின் சாட்சி பதிவு இடம்பெற்றது. அதில் சில மேலதிக தகவல்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் பெற வேண்டியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட மாணவியின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. மாணவி நகத்தினால் கீறியுள்ளார். அதில் சில தசைகள் இருந்தமையால் அவை அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. அவ்வாறு எனில் இந்த எதிரிகள் உடலில் அக்கால பகுதியில் நக கீறல் அடையாளம் இருந்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் உடலில் அவ்வாறான காயங்கள் இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் இல்லை. அவ்வாறு எனில் நக கீறல் காயம் உடைய ஒருவர் வெளியில் உள்ளார்.
இவ்வாறாக சில மேலதிக தகவல்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் பெற வேண்டிய தேவையுள்ளதால் அவரை மீண்டும் சாட்சியமாக அழைக்க வேண்டும் என கோரினார்.
சுவிஸ் குமாரின் மனைவியும் சாட்சியம். 
அதற்கு மன்று அனுமதி அளித்தது. அதேவேளை எதிரிகள் தரப்பு சாட்சியமாக 9ஆம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் மனைவி மகாலக்சுமி சசிக்குமார் மற்றும் குகரூபன் ஆகியோரையும் எதிரிகள் தரப்பு சாட்சியமாக அழைக்கப்பட்டு உள்ளனர்.
முதலாம் எதிரி சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம். 
அதனை அடுத்து எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் மன்றில் ஆரம்பமாகியது. அதில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திர குமார் சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து சாட்சியம் அளித்தார்.
அதில் , நான் புங்குடுதீவில் 23 வருடமாக வசிக்கின்றேன். கடற்தொழில் செய்து வருகின்றேன். மாணவி கொலை செய்யப்பட்டது சம்பவம் நடந்த மறுநாள் 14ஆம் திகதி மே மாதம் 2015ஆம் ஆண்டே தெரியும். நான் அந்த மாணவியை இரண்டே இரண்டு தடவை தான் நேரில் கண்டுள்ளேன்.
அடித்து துன்புறுத்தினார்கள். 
என்னை அந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என ஊர்காவற்துறை போலீசார் 14ஆம் திகதி கைது செய்தனர். கைது செய்து , என்னுடைய சேர்ட்ட கழட்டி கைகளை பின்புறமாக கட்டி கீழே தள்ளி விழுத்தி என்னுடைய கால்களை கோபி எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் மிதித்து இருக்க தோள் பட்டையில் மூன்று நட்சத்திரம் உடைய பொலிஸ் அதிகாரி ஒருவர் என்னை கொட்டனால் தாக்கினார். என கூறி மன்றில் தன்னை தாக்கிய விதத்தை செய்கை மூலம் செய்து காட்டினார்.
அவ்வாறு என்னை தாக்கிய பின்னர் அவர்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரி ஒருவரிடம் என்னை அழைத்து சென்றனர். அங்கு நான் என்னை அவர்கள் தாக்கியது தொடர்பில் கூறிய போது கோபி எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் என்னை சொல்லவிடாது தடுத்தார். அதனையும் மீறி நான் அந்த உயர் அதிகாரியிடம் முறையிட்டேன்.
குற்றத்தை புரியவில்லை. 
பின்னர் என்னை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது அப்போது நீதவானாக இருந்த லெனின்குமார் அவர்களிடமும் நான் இந்த குற்றத்தை செய்யவில்லை என கூறினேன். அத்துடன் போலீசார் என்னை அடித்து துன்புறுத்தல் செய்தமையையும் கூறினேன். நான் சிறைக்குள் இருந்ததால் எனக்கு புரியப்பட்ட சித்திரவதை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்ய முடியவில்லை.
இந்த மாணவி கொலை வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மீதான குற்றசாட்டுக்கள் அனைத்தையும் முற்றாக மறுக்கின்றேன். என தெரிவித்தார்.
அதனை அடுத்து  முதலாம் எதிரி சார்பாக மன்றில் வேறு சாட்சியங்களை அழைக்கவில்லை என முதலாம் எதிரி சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்ததை அடுத்து முதலாம் எதிரியின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டது.
இரண்டாம் எதிரி சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம். 
அதனை தொடர்ந்து இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து சாட்சியம் அளித்தார்.
அதன் போது,  நான் புங்குடுதீவில் வசிக்கின்றேன். கடற்தொழில் செய்து வருகின்றேன். கடற்தொழிலுக்கு செல்லாத சமயங்களில் பனைமரங்களில் ஏறி மட்டை வெட்டுதல் , தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பிடுங்குதல் போன்ற வேலைகளை செய்வேன்.
போலீசார் என்னை கைது செய்யவில்லை. 
நானே போலிசை தேடி சென்றேன். 
மாணவி படுகொலை செய்யப்பட்ட மறுநாள் 14ஆம் திகதி மே மாதம் 2015ஆம் ஆண்டு காலையில் நான் வேலைக்கு சென்று விட்டேன் மதியம் 1 மணியளவில் தான் வீட்டுக்கு சென்றேன். அப்போது எனது மனைவி கூறினார் ” பொலிஸ் உங்களை ஆலடிக்கு வர சொல்லிட்டு போறாங்க ” என்று அதனால் நான் அங்கே சென்றேன்.
அங்கே சென்றதும் பொலிஸ் என்னை கைது செய்து அழைத்து சென்று எனது முதுக்குக்கு பின் புறமாக இரண்டு கைகளையும் சேர்த்து விலங்கு மாட்டி என்னை தடிமனான கொட்டாங்களால் அடித்து துன்புறுத்தினார்கள். என தன்னை தாக்கிய விதம் என சைகை மூலம் மன்றில் செய்து காட்டினார்.
சிங்களத்தில் எழுதிய தாளில் கையெழுத்திட்டேன். 
என்னிடம் எந்தவிதமான வாக்கு மூலங்களையும் பெறாமல் சிங்களத்தில் எழுதிய தாள் ஒன்றில் என்னை கையொப்பம் இட சொல்லி அடித்தார்கள் அடிதாங்காமல் அதில் என்ன எழுதி இருக்கின்றது என தெரியாமல் அதில் கையொப்பம் இட்டேன்.
பின்னர் என்னிடம் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் (CID) சிங்களத்தில் எழுதிய தாளில் கையொப்பம் வாங்கினார்கள். கையொப்பம் வாங்கி சிறிது நேரத்தில்  தமிழ் உத்தியோகஸ்தர் ஒருவர் என்னிடம் தமிழில் எழுதிய வாக்கு மூலத்தில் கையொப்பம் வாங்கினார். ஆனால் அதில் என்ன எழுதி இருக்கின்றது என்பதனை வாசித்து காட்டவில்லை.
உதயசூரியன் சுரேஷ்கரனை (கண்கண்ட சாட்சி என சாட்சியம் அளித்தவர்) எனக்கு தெரியும் ஆனால் பழக்கமில்லை. அடுத்ததாக நடராஜா புவனேஸ்வரன்  (கண்கண்ட சாட்சி என சாட்சியம் அளித்தவர்)  என்பவரை தெரியும். அவரது வீட்டுக்கு கள்ளு குடிக்க போய் இருக்கிறேன்.
கள்ளு குடிக்க போவேன். 
கடற்தொழிலுக்கு போய் வந்த பின்னர் மாலையில் சில வேளை கள்ளு  குடிக்க போவேன். சிலவேளை வீட்டில் இருப்பேன்.  நடராஜா புவனேஸ்வரன் வீட்டுக்கு கள்ளு குடிக்க 2014ஆம் ஆண்டு கால பகுதியில் தான் இறுதியாக சென்றேன். பின்னர் வழக்கு ஒன்று தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவி கொலை செய்யபப்டும் காலத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே போவதில்லை.
நான் கள்ளு குடிக்க போகும் போது எப்பவும் தனியாகவே போவேன். யாருடனும் கூட்டு சேர்ந்து போவதில்லை. இந்த வழக்கில் 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன் என்னுடன் பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர் அதனால் அவரை நன்கு தெரியும்.
ஆறாம் எதிரியான சிவதேவன் துசந்த் என்பவரை எனக்கு முன்னர் தெரியாது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் சிறைச்சாலையில் இருக்கும் போதே பழக்கம்.
மாணவி கொலை செய்யப்பட்ட 13ஆம் திகதி நான் வீட்டில் இருந்து பனை மட்டை வெட்டிக்கொண்டு இருந்தேன். எனக்கும் படுகொலை செய்யபப்ட்ட மாணவியின் தாயாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
 
கதிரை களவாடிய குற்றம். 
ஊர்காவற்துறை நீதிமன்றில் கதிரை ஒன்று களவாடியமை தொடர்பில் வழக்கு ஒன்று இருந்தது. அது புங்குடுதீவை சேர்ந்த ஒருவர் கொழும்பில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டில் இருந்த கதிரையை களவாடியமை தொடர்பில்
அந்த வழக்கின் முறைப்பாட்டாளர் வீட்டின் உரிமையாளர் தான். மாணவியின் வீடு கதிரை களவாடிய வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ளது.  அந்த வீட்டில் இருந்து மாணவியின் வீட்டுக்கு செல்வதாயின் 15 நிமிடம் நடந்து செல்ல வேண்டும். படுகொலை செய்யபப்ட்ட மாணவியை நான் ஒரு தடவை கூட காணவில்லை.
இந்த வழக்கின் 6ஆம் எதிரியான சிவதேவன் துசாந் மாணவியை ஒரு தலையாக காதலித்தமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. மாணவியை கடத்தி தருமாறு துசந்த் என்னிடம் கேட்டதும் இல்லை அதற்காக எனக்கு 23 ஆயிரம் ரூபாய் பணம் கப்பமாக தரவும் இல்லை.
இந்த வழக்கில் உள்ள தவக்குமார் , சந்திரஹாசன் , துசந்த் ஆகியோருடன் சேர்ந்து நான் மாணவியை கடத்தவும் இல்லை , வன்புணர்வுக்கு உட்படுத்தவும் இல்லை கொலை  செய்யவும் இல்லை. எனக்கும் மனைவி பாடசாலை செல்லும் மகள் உண்டு நான் அவ்வாறான செயலில் ஈடுபட மாட்டேன்.
மாணவியை இராணுவம் கொலை செய்து இருக்கலாம். 
மாணவியின் படுகொலை மிக கொடூரமாக நடந்துள்ளது. அதனை இராணுவத்தினர் செய்ததாகவே முன்னர் ஊரில் கதைத்தார்கள்.  இது தொடர்பில் நான் எனது சட்டத்தரணியிடம் கூறி இருந்தேன். ஆனால் வழக்கின் சாட்சியங்கள் பதியப்படும் போது அது தொடர்பில் சட்டத்தரணி எந்த சாட்சியத்திடமும் கேட்கவில்லை.
அச்சுறுத்தி சாட்சியம் அளிக்க வைத்துள்ளனர். 
இந்த வழக்கில் சம்பவ இடத்தில் என்னை காலையில் கண்டதாக சாட்சியம் அளித்த பாலசிங்கம் என்பவர் எனது மைத்துனர். நான் அவரின் தங்கையை தான் திருமணம் முடித்துள்ளேன். அவரும் எனது மனைவியும் ஒருநாள் என்னை வவுனியா சிறைச்சாலையில் சந்தித்து தம்மை புலனாய்வு துறையினர் மிரட்டுவதாகவும் , தமது வாய்க்குள் கைத்துப்பாக்கியை வைத்து பொய் சாட்சி கூறுமாறு மிரட்டுவதாக கூறினார்கள். அதனால் பயத்தினால் தான் அன்று எனது மச்சான் எனக்கு எதிராக சாட்சியம் அளித்தார்.
அது தொடர்பிலும் நான் எனது சட்டத்தரணிக்கு கூறி இருந்தேன். அவர் அது தொடர்பில் மன்றில் எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை.
என்னை போலீசார் தாக்கியது தொடர்பில் அப்போதைய ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் லெனின்குமார் அவர்களிடம் கூறி இருந்தேன். அங்கும் நான் என் மீது சுமத்தபப்ட்ட குற்ற சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.
குற்றத்தை முற்றாக மறுக்கின்றேன். 
எனக்கும் இந்த குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மீதான குற்ற சாட்டுக்கள் அனைத்தையும் மறுக்கின்றேன். என தெரிவித்தார். அதனை அடுத்து 2ஆம் எதிரி தரப்பில் வேறு சாட்சியங்களை அழைக்கவில்லை என எதிரி தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்ததை அடுத்து , 2ஆம் எதிரியின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டது.
மூன்றாம் எதிரி சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம்.
அதனை அடுத்து மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கையில் ,
நான் கடற்தொழில் செய்து வருகிறேன். 14 ஆம் திகதி காலை 10 மணியளவில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சில பொலிசார் என்னை கைது செய்தனர்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஆடைகளை களைந்து இரண்டரை மணித்தியாலங்களாக அடித்து துன்புறுத்தி சிங்களத்தில் எழுதிய தாளில் கையொப்பம் வாங்கினார்கள். அதேபோலவே புலனாய்வு துறையினரும் சிங்களத்தில் எழுதிய தாளில் கையொப்பம் வாங்கினார்கள்.
திருமணம் குழம்பி விட்டது. 
 
நான் இன்னும் திருமணம் செய்யவில்லை. எனக்கு திருமணம் பேசி முற்றாகி இருந்த சமயத்தில் தான் இந்த வழக்கில் என்னை கைது செய்தனர் அதனால் திருமணமும் நின்று விட்டது.
புங்குடுதீவில் வசிக்கும் அம்பிகா என்பவர் கொழும்பில் வசித்த வேளை அவரது வீட்டில் இருந்து கதிரை களவாடப்பட்டமை தொடர்பில் அவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதில் எனது பெயரையும் எனது அண்ணாவான ஜெயக்குமாரின் பெயரை குறிப்பிட்டு இருந்தார். அந்த குற்றத்தை நான் ஏற்றுக்கொண்டேன். படுகொலை செய்யபப்ட்ட மாணவியின் தாயார் அந்த வழக்குக்காக நீதிமன்றுக்கு சாட்சியம் அளிக்க  வந்து இருந்தா , ஆனால் சாட்சியத்தின் போது  , தனக்கு எதுவும் தெரியாது என்றே கூறி இருந்தார்.
 
சீசனுக்கே கள்ளு குடிப்பவன். 
எனக்கு கள்ளு குடிக்கும் பழக்கம் நெடுக இல்லை. கள்ளு சீசன் நேரம் மட்டுமே குடிப்பேன். புவனேஸ்வரன் வீட்டுக்கு கள்ளு குடிக்க போறதில்லை. மாணவி கொலை செய்யப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு மேலாக அங்கு போறதில்லை.
மாணவியை கடத்தி 23 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை. நான் உழைத்து சாப்பிடுபவன். அந்த கதிரையை கூட நான் களவாடவில்லை. அதனை ஜெயக்குமார் தான் சைக்கிளில் கட்டிக்கொண்டு வந்தார். அதனை நான் இறக்கி சற்று தூரம் தள்ளி வைத்தேன். அதுவே நான் செய்த குற்றம்.
சம்பவம் இடம்பெற்ற நேரம் சம்பவ இடத்தில் நிற்கவில்லை. 
மாணவி படுகொலை செய்யபப்ட்ட தினமான 13ஆம் திகதி நான் எனது சகோதரனான இந்திரகுமாருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு ஒன்று இருப்பதனால் , அவரை பஸ்ஸில் ஏற்றி விட காலை 7.30க்கு சைக்கிளில் அழைத்து சென்றேன். அதனை படுகொலை செய்யபப்ட்ட மாணவியின் சகோதரன் உள்ளிட்டவர்கள் கண்டார்கள். ஆலடி சந்தியில் நின்று காலை 8.20 மணிக்கு பஸ் ஏற்றி விட்டேன்.
இந்த தகவல்களை நான் பொலிசாரிடமும் புலனாய்வு துறையினரிடமும் தெரிவித்து உள்ளேன்.எனது சட்டத்தரனியிடமும் தெரிவித்து இருந்தேன். ஆனால் அவர் அது தொடர்பில் மன்றில் தெரிவிக்கவில்லை.
அடித்து துன்புறுத்தல் புரிந்தனர். 
என்னை போலீசார் அடித்து துன்புறுத்தல் செய்தமை தொடர்பில் , பொலிஸ் உயர் அதிகாரி , சட்ட வைத்திய அதிகாரி , புலனாய்வு துறையினர் , ஊர்காவற்துறை நீதவான் மற்றும் இந்த நீதிமன்றில் என 5 இடத்தில் கூறியுள்ளேன்.
இந்த குற்றத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த குற்றசாட்டுக்களை நான் முற்றாக மறுக்கின்றேன். என தெரிவித்தார். அதனை அடுத்து மூன்றாம் எதிரி சார்பில் வேறு சாட்சியங்களை அழைக்கவில்லை என மூன்றாம் எதிரி தரப்பில் மன்றில் சட்டத்தரணி தெரிவித்ததை அடுத்து மூன்றாம் எதிரியின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டன.
நான்காம் எதிரி சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம். 
அதனை தொடர்ந்து 4ஆம் எதிரியான மகாலிங்கம் சசீந்திரன் சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து சாட்சியம் அளிக்கையில் ,
நான் தாய்லாந்தில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறேன். இந்த குற்றத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. முதலில் மாணவியை நான் தான் கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்தேன் என போலீசார் கூறினார்கள் தற்போது அந்த அந்த குற்றத்திற்கு உடந்தையாக செயற்பட்டமை,  திட்டம் தீட்டி கொடுத்தமை என குற்ற சாட்டு முன் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த குற்ற சாட்டுக்களை நான் முற்றாக மறுக்கிறேன். நான் இந்த குற்ற சாட்டுக்களை செய்யவில்லை. என் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்ற சாட்டால் எனது அம்மா இறந்து விட்டார்.  எனது வீடு அழிக்கப்பட்டு விட்டது.
எனக்கு எதிராக எந்த சான்றுகளும் சாட்சியங்களும் இல்லை. 
இந்த வழக்கில் எனக்கு எதிராக இதுவரையில் எந்த சான்று பொருட்களும் முன் வைக்கப்படவில்லை. சாட்சியங்களும் எனக்கு எதிராக இல்லை
ஒருவர் மாத்திரம் மாணவி படுகொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் 12ஆம் திகதி என்னை புங்குடுதீவில் வான் ஒன்றில் கண்டதாகவும் , நாங்கள் வானில் இருந்து மாணவி பஸ்ஸில் வந்து இறங்கி செல்வதனை பார்த்ததாகவும் சாட்சியம் அளித்து உள்ளார். ஆனால் நான் குற்ற சம்பவத்துடன் தொடர்பு உள்ளவன் என சாட்சியம் அளிக்க வில்லை.
சம்பவ தினத்தன்று கொழும்பில் நின்றேன். 
நான் மாணவி கொல்லப்பட்ட தினத்தன்று கொழும்பில் நின்றேன். அன்றைய தினம் காலை கோயிலுக்கு சென்று விட்டு , நாங்கள் தங்கி இருந்த லொட்ஜ் முன்பாக உள்ள உணவகத்தில் உணவு அருந்தினேன். காலை 9 மணியளவில் நண்பன் ஒருவன் வந்தான் அவனுடன் சென்று வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மதுபான சாலைக்கு சென்று மதுபானங்களை வாங்கிகொண்டு மீண்டும் நாம் தங்கி இருந்த லொட்ஜ்க்கு வந்து மது அருந்தினோம்.
அப்போது அங்கு குமார் அண்ணா (சுவிஸ்குமார்) நிசாந்தன் , கண்ணா ஆகியோரும் வந்து எம்முடன் மது அருந்தினார்கள். அப்போது நான் எனக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து காசினோவுக்கு சென்றேன். அங்கிருந்து மதியம் மீண்டும் லொட்ஜ்க்கு வந்தேன்.
பின்னர் நாம் அங்கிருந்து மோதரைக்கு சென்றோம்.அங்கு ஒரு மதுபான சாலைக்கு சென்று மது அருந்தினோம்.
பின்னர் 14ஆம் திகதி புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யபப்ட்ட சம்பவத்தை அறிந்தோம். கொழும்பில் எமது நண்பனும் ஓட்டோ ஒடுபவருமான காண்டீபன் என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரி தான் மாணவி. அதனால் நாம் மாணவியின் இறுதி சடங்குக்காக புங்குடுதீவுக்கு கொழும்பில் இருந்து வந்தோம்.
அதற்கு முன்னர் எனது அண்ணனான சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் 7ஆம் திகதி சுவிஸ் நாட்டுக்கு சென்று இருக்க வேண்டும். 5ஆம் திகதி சுவிஸ் நாட்டில் வவுனியாவை சேர்ந்தவர் நண்பனாக இருந்தவர் ஒருவர் உயிரிழந்து அவரது உடல் வவுனியாவுக்கு கொண்டு வரப்பட்டதனால் , அவரது இறுதி சடங்குக்கு சென்றமையால் 7ஆம் திகதி சுவிஸ் நாட்டுக்கு செல்ல முடியாது போய் விட்டது. அதனாலையே அவர் எம்முடன் கொழும்பில் தங்கி இருந்தர்.
இறுதி சடங்கில் கலந்து கொள்ளவே புங்குடுதீவு வந்தோம். 
மாணவியின் இறுதி சடங்குக்கு நாங்கள் கொழும்பில் இருந்து வந்து கலந்து கொண்ட பின்னர் புங்குடுதீவில் நின்றோம்.  17ஆம் திகதி காலை புளியங்கூடல் விநாயகர் ஆலய தேர் திருவிழாவுக்கு சென்று அன்னதானத்தில் சாப்பிட்டு விட்டு கொழும்புக்கு செல்வதற்கு வாகனத்தில் தயாராக இருந்த வேளை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி ஊடாக எமது வாகனத்தில் இருந்த நண்பன் ஒருவனுக்கு போலீசார் கூறினார்கள் துசாந் என்பவருக்கு சசிக்குமார் (சுவிஸ் குமார்) காசு கொடுத்துள்ளார். அது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என , நாம் அதற்காக பொலிஸ் நிலையம் வருவதாக கூறினோம். அதற்கு அவர்கள் இல்லை நீங்கள் ஆலடி சந்திக்கு வருமாறு கூறினார்கள். நாங்கள் வாகனத்தில் அங்கு சென்றோம்.
அங்கு நின்ற இரு பொலிசார் குமார் அண்ணனை (சுவிஸ் குமார்) விசாரணை செய்யும் போது நாங்கள் வாகனத்தில் இருந்தோம். அப்போது அங்கு வந்த ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த கோபி எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் வந்து ” என்னடா இங்கே நிற்கிறீங்க ” என எம்மிடம் கேட்டார் நாம் குமார் அண்ணாவை விசாரிப்பதை சொன்னோம். பின்னர் கோபி எம்முடன் மாங்காய் குத்தி சாப்பிட்டார். பிறகு அங்கிருந்து சென்று ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , மற்றும் மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை அழைத்து வந்து சந்திரஹாசன் , நிசாந்தன் , பெரியாம்பி , கண்ணா ஆகியோர் கைகளில் விலங்கிட்டு கைது செய்து கொண்டு சென்றனர்.
என்னை கைது செய்தனர். 
அப்போது நான் ஏன் கைது செய்கிறீங்க என கேட்ட போது , சிறிய விசாரணைக்கு அழைத்து செல்கின்றோம். முடிய விடுகின்றோம் என கூறி அழைத்து சென்றனர். அப்போது நானும் குமார் அண்ணாவும் வாகனத்தில் போலீசாரை பின் தொடர்ந்து சென்றோம். அப்போது வழியில் சந்திரஹாசன் வீட்டில் சந்திரஹாசனை கைது செய்த விடயத்தை கூறிகொண்டு இருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் யார் சசி என கேட்டனர். நான் தான் என்றேன். தமக்கு பின்னால் மகா வித்தியாலயம் வருமாறு கூறி சென்றனர். நான் மகா வித்தியாலயம் சென்ற போது என்னையும் கைது செய்தனர்.
மரத்தில் நிர்வாணமாக கட்டி தூக்கி அடித்தனர். 
எங்களை குறிகட்டுவான் பொலிஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். நான் சென்ற போது ஏற்கனவே கைது செய்து கொண்டு சென்று இருந்த நிசாந்தனை நிர்வாணமாக மரத்தில் கைகள் இரண்டும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கியவாறு போலீசார் இருந்தனர்.
என்னை கொண்டு சென்றதும் நிசாந்தனை இறக்கி விட்டு எனது இரண்டு கைகளையும் பின்புறமாக கட்டி மேசை ஒன்றின் மீது ஏற்றி மரத்தில் கட்டித்தூக்கி அடித்தார்கள். அப்போது கயிறு இளகி எனது கால் தரையில் பட தொடங்கியதும் கதிரை ஒன்றில் ஏற்றி கட்டி தூக்கி அடித்தார்கள்.
தாம் கேட்கும் 18 கேள்விகளுக்கு பதில் சொல்லு என கேட்டு அடித்தார்கள். நான் தான் மாணவியை கடத்தியதாகவும் , நானே முதலில் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் ஒப்புக்கொள்ளுமாறு கூறி என்னை தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் ஒப்புக்கொண்டேன்.
 
ஒலிபெருக்கி கட்டி போலீசார் நாமே குற்றவாளி என அறிவித்தனர். 
உடனே அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் போலீசார் ஒலிபெருக்கிகளை கட்டி மகாலிங்கம் தயாநிதி ஆகியோரின் மகனே மாணவியை வன்புணர்ந்து கொலை செய்தார் என ஊருக்குள் அறிவித்தார்கள்.
பின்னர் எம்மை குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில்  இருந்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல போலீசார் பொலிஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்ற வேளை ஊரில் உள்ளவர்கள் நாலைந்து வாகனங்களில் ஏறி வந்து கொண்டு இருந்தார்கள் உடனே ஜீப் லைட்டை நிறுத்த சொல்லி ஜீப்பை திருப்பி மீண்டும் எம்மை குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து கடற்படையின் உதவியுடன் அவர்களின் படகில் ஏற்றி எம்மை காரைநகர் கொண்டு சென்று அங்கிருந்து யாழ்ப்பான பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
சித்திரவதை தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியிடம் கூறினோம். 
மறுநாள் எம்மை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்றனர். அங்கு நாம் வைத்தியரிடம் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையிட்டோம். அவர் கையில் ஒரு பேப்பரில் மனித உடல் அமைப்பினை கீறி அதில் தோள் பட்டை , கை மணிக்கட்டு,  தலை பகுதி போன்ற பகுதிகளை குறித்தார். அத்துடன் நீங்கள் உள்ள உடல் நிலைக்கு நீங்கள் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். ஆனாலும் யாழ்ப்பணத்தில் உள்ள தற்போதைய சூழலில் அது முடியாது. சிறைசாலை வைத்திய சாலையில் சிகிச்சை பெறுங்கள் என கூறி அனுப்பினார்.
அதன் பின்னர் எம்மை நீதவானிடம் அழைத்து சென்றார்கள் நாம் அங்கு எம்மை தாக்கிய விடயத்தை சொன்னோம் அத்துடன் சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் நான் கொழும்பில் நின்றேன் எனவும் கூறினேன்.
அப்போது பொலிசார் மாணவியின் மூக்கு கண்ணாடி உட்பட சில சான்று பொருட்களை மீட்க வேண்டும் இவர்களை 24 மணித்தியாலம் தமது பாதுகாப்பில் வைத்து இருக்க அனுமதிக்க வேண்டும் என போலீசார் நீதவானிடம் கோரினார்கள். அதற்கு நீதவான் அனுமதி அளித்தார்.
அதன் பின்னர் மீண்டும் எம்மை பொலிஸ் நிலையம் அழைத்து வந்து ஏன் நீதவனுடன் கதைத்தாய் என கேட்டு தாக்கினார்கள். பின்னர் இரவு 11 மணியளவில் என்னையும் சந்திரஹாசனையும் பொலிஸ் வாகனத்தில் புங்குடுதீவில் உள்ள எமது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
அம்மாவின் கண்ணாடியை , மாணவியின் கண்ணாடி என பொலிசார் மீட்டனர். 
அங்கு எமது வீடு அழிக்கப்பட்டு தீயிட்டு கொழுத்தப்பட்ட நிலையில் இருந்தது. எரிந்த வீட்டில் எனது அம்மாவின் மூக்கு கண்ணாடி பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது. அதனை மாணவியின் கண்ணாடி என பொலிசார் மீட்டனர்.
பின்னர் மறுநாள் மீண்டும் சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்று அறிக்கை பெற்ற பின்னர் எம்மை நீதவானிடம் அழைத்து சென்றனர். நீதவான் எம்மை விளக்க மறியலில் வைக்க உத்தரவு இட்டார்.
முதலில் யாழ்ப்பான சிறைச்சாலையில் தான் தடுத்து வைத்து இருந்தனர். பின்னர் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றினார்கள். அங்கிருந்து ஒன்றரை மாதம் கொழும்பு நாலாம் மாடிக்கு புலனாய்வு துறையினர் கொண்டு சென்றனர். கொண்டு சென்ற உடனே இரண்டு அடி அடித்து விட்டு நாளை வருவோம் கேட்கிற கேள்விகளுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என கூறி சென்றனர்.
CID எந்த வாக்கு மூலமும் பெறவில்லை. 
அதன் பின்னர் ஒருநாள் கூட என்னை அவர்கள் அடித்ததும் இல்லை என்னிடம் எந்த கேள்வியையும் கேட்டதும் இல்லை.
இந்த வழக்கில் என் மீது பொய்யான குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் எனது அம்மா உயிரிழந்து விட்டார். வீடும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது.தற்போது எனது மனைவி இரண்டு பிள்ளைகளையும் இழந்து விடுவேனோ என பயமாக உள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என கோருகிறேன்.
ஊர்காவற்துறை பொலிசார் நான் தான் மாணவியை கடத்தினேன். வன்புணர்வுக்கு உட்படுத்தினேன். என முதலில் கூறி வாக்கு மூலத்தில் கையொப்பம் வைத்தார்கள். ஆனால் இந்த மன்றினால் எனக்கு தரப்பட்ட குற்ற பகிர்வு பத்திரத்தில் அந்த வாக்கு மூலம் இணைக்கபப்ட்டு இருக்கவில்லை என தெரிவித்தார்.
கொழும்பில் நின்றதற்கு சிசிரிவி கமராப் பதிவு உள்ளது. 
அதனை தொடர்ந்து,  என்னை 2015ஆம் ஆண்டு மே 12ஆம் திகதி புங்குடுதீவில் கண்டதாக சாட்சிய கூறியது பொய். நான் அன்றைய தினம் கொழும்பில் தங்கியிருந்தேன். அதற்கு நான் உணவு வாங்கிய யாழ். ஹோட்டல் சிசிரிவி கமராப் பதிவு உள்ளது. அதனைப் பெறுவதற்கு அந்தக் ஹோட்டல் உரிமையாளரிடம் கோரினோம். ஆனால் கிடைக்கவில்லை. சாட்சியமளிக்க அவரை அழைத்த போதும் அச்சத்தால் அவர் வரமாட்டேன் என்று கூறிவிட்டார் என  நான்காம் எதிரியான என்று சசிதரன் சாட்சியமளித்தார்.
அதனை அடுத்து,  12ஆம் திகதி நீங்கள் கொழும்பிலிருந்ததாக நீதிவான் நீதிமன்றிடமோ, தீர்ப்பாயத்தில் நடந்த குறுக்கு விசாரணையிலோ தெரிவிக்கப்படவில்லை. எனவே நடக்காத ஒன்றை நடந்ததாகப் பொய் கூறவே இந்த விடயத்தை தற்போது கூறுகின்றீர்கள் என்று பிரதி மன்றாடியார் அதிபதி எதிரியிடம் கேட்டார்.
அதற்கு இந்த விடயத்தைச் சொல்வதற்கு தற்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று எதிரி பதிலளித்ததார்.
கடற்படையினரே மாணவியைக்  கொன்றனர். 
 
“இந்தக் கொடூரச் சம்பவத்தை கடற்படையினரே செய்தனர். இந்தச் சம்பவத்துக்கு முன்பதாக இரு பெண்கள் இதே போன்றே படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் படுகொலைகளுக்கு கடற்படையினரே கைது செய்யப்பட்டனர்.
என் கண் முன்னால் செய்திருந்தால் கண்ட துண்டமாக வெட்டி இருப்பேன். 
அதனை அடுத்து  ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து சாட்சியம் அளிக்கையில் ,
“நான் கடற்றொழில் செய்பவன். இந்தக் கொலையுடன் எனக்கு எதுவிதத் தொடர்பும் இல்லை. இவ்வாறு ஒரு சம்பவம் நடப்பதைக் கண்டிருந்தால் அதனைச் செய்தவர்களை துண்டம் துண்டமாக வெட்டிப் போட்டிருப்பேன்.
 
எனக்கு எதிராக கூறப்பட்ட சாட்சியங்கள் பொய். 
கொலை நடைபெற்ற தினத்தன்று என்னை சம்பவ இடத்துக்கு அருகே என்னை சாறத்துடன் கண்டதாக பெண்ணொருவர் சாட்சியமளித்திருந்தார். அவர் பொய் கூறியுள்ளார். அவருக்கும் எனக்கும் இடையே முரண்பாடு உள்ளது. அது தொடர்பில் அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்.
கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் ஆலடிப் பகுதியில் என்னை வான் ஒன்றுக்குள் கண்டதாகவும், அதற்குள் சுவிஸ்குமாரும் இருந்ததாகவும் சாட்சி ஒருவர் கூறினார். அதுவும் பொய்” என சாட்சியமளித்தார்.
அதன் போது,  மே 12ஆம் திகதி ஆலடியில் வான் ஒன்றில் உம்மைக் கண்டதாகச் சாட்சியமளித்தவருக்கும் உமக்கும் இடையேயும் முரண்பாடு உண்டா? என தீர்ப்பாயம் கேள்வியெழுப்பியது. எதிரி இல்லை எனத் தெரிவித்தார்.
 
வித்தியாவை காதலிக்கவில்லை. மச்சாளை காதலித்தேன். 
அதனை அடுத்து ஆறாம் எதிரியான சிவதேவன் துசாந்த் சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து சாட்சியம் அளிக்கையில் ,
நான் வேலணைப் பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலகத்தில் வெளிக்களத் தொழிலாளியாகப் பணியாற்றுகின்றேன். நான் வித்தியாவை ஒருதலையாகக் காதலித்ததாகக் கூறுவது பொய்யானது. நான் எனது மச்சாளையே காதலித்தேன். என்னை இந்த வழக்கில் கைது செய்ததால் அவர் வேறொருவரைத் திருமணம் செய்துவிட்டார்.
மூக்கு கண்ணாடி மீட்டமை பொய் .
எனது வீட்டிலிருந்து வித்தியாவின் மூக்குக் கண்ணாடி எடுத்தமையும் பொய்யான குற்றச்சாட்டு. அதனை எனக்கு முன்பாகவே வைத்துவிட்டு சிஐடியினர் எடுத்தனர்.
சம்பவ தினத்தன்று என்னால் அது வைக்கப்பட்டிருந்தால் எனது வீட்டுக்குத் தீ வைத்த போது அது எரிந்திருக்கும்” என சாட்சியமளித்தார்.
அதன் போது,  “மூக்குக் கண்ணாடி மீட்கப்பட்ட இடம் எரிந்த நிலையில் காணப்பட்டமை தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்ற குறுக்கு விசாரணையில் உங்கள் சட்டத்தரணியால் தெரிவிக்கப்படவில்லை.. தற்போது அதனைக் கூறுவது நடக்காததை நடந்ததாகக் கூறும் பொய்யான சாட்சியமாகும்” என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் எதிரியிடம் கூறினார்.
அதற்கு எதிரி இது தொடர்பில் நான்  சட்டத்தரணியிடம் கூறியிருந்தேன். ஆனால் அவரால் இந்த விடயம் கேட்கப்படவில்லை என கூறினார்.
அதனை அடுத்து முதல் ஆறு எதிரிகளின் சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்தன. இன்று செவ்வாய்க்கிழமை 7ஆம் 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகளின் சாட்சியப் பதிவுகள் இடம்பெறும் என அறிவிக்கப்ப்பட்டது.
எதிரிகளை விளக்கமறியலில் வைக்க உத்தரவு. 
அதனை தொடர்ந்து 9 எதிரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்ட மன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மீண்டும் நீதாய விளக்கம் விசாரணைக்காக கூடும் என அறிவித்தது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More