குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார். கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது இலங்கை அணி தோல்வியைத் தழுவவிருந்த நிலையில், ரசிகர்கள் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதனால் போட்டியை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது, போட்டி சுமார் அரை மணித்தியாலம் இடைநிறுத்தப்பட்டு பின்னரே மீளவும் நடத்தப்பட்டது. இலங்கை அணி வீரர்களை இலக்கு வைத்து போத்தல்களை வீசி எதிர்ப்பை வெளியிட்ட ரசிகர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வீடியோ காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.