குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பரீட்சைகளில் இடம்பெறும் மோசடிகளை தடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது. அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரீட்சையில் மேற்கொள்ளும் மோசடிகளை தடுக்க இவ்வாறு குழுவொன்றை அமைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பரீட்சை முறைகேடுகளை தடுக்க விசேட குழுவொன்றை அமைக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஜே.எம். புஸ்பகுமாரவிற்கு உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளது.
அண்மையில் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவர், அவருக்கு உதவிய தனியார் வகுப்பு ஆசிரியர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். உயர்தரப் பரீட்சையின் போது இந்த மோசடி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.