அந்நிய முதலீடு தொடர்பான வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்றையதினம் இரண்டாவது முறையாக முன்னிலையாகியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் விதிமுறைகளை மீறி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை விற்றமைக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் அதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீசியஷ் நாட்டில் இருந்து பணம் வந்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் ; சோதனை நடத்தியதுடன் அவர்மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் 2 முறை அழைப்பாணை அனுப்பியும் அவர் முன்னிலையாகததன் காரணமாக அவரை தேடப்படும் நபராக அறிவித்து மத்திய அரசு விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இந்தநிலையில் கடந்த 23ம் திகதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் முன்னிலையாகி விசாரணைகளை எதிர்கொண்ட கார்த்தி சிதம்பரம் நேற்றும் முன்னிலையாகியுள்ளார். அவரிடம் 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.