மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மும்பையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெற்து வருகின்ற நிலையில் பல கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் தெற்கு மும்பையில் இன்று காலை 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அந்த கட்டிட தொகுதியில் சுமார் 10 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 பேர் வசித்து வந்தனர். தண்ணீர் சூழ்ந்திருந்ததால் ஏற்கனவே சேதம் அடைந்திருந்த அந்த கட்டிடம் விழுந்து தரைமட்டமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சென்ற மீட்புபடையினர் இன்று பிற்பகல் வரையில் 19 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இடிபாடுகளில் சிக்கி தவித்த 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது – 3 பேர் பலி :-
Aug 31, 2017 @ 04:10
இந்தியாவின் மும்பை நகரின் பெண்டி பசார் பகுதியில் உள்ள, 5 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. இந்தக் கட்டிட இடிபாடுகளில் 30-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் கட்டட இடிபாடு குறித்து, மாநகராட்சி பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மராட்டிய மாநிலத்தில் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் ஒரே நாளில் 30 செ.மீ. அளவுக்கு மழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.