குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு கடற்படையினா் இணக்கம் தெரிவித்துள்ளனா். இன்று இரணைத்தீவில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
தங்களது பூர்வீக இடத்தில் மீள குடியேற வேண்டும் என வலியுறுத்தி இரணைத்தீவு மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை 123 நாளாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பாதுகாப்ப இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் டிஎம். சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிறிதரன், பாதுகாப்பு துறை அதிகாரிகள், பங்குதந்தையர்கள் கடற்படையினா் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விணக்கம் ஏற்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு இரணைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது இரணைமாதாநகர் கிராமத்தில் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களது பூர்வீக நிலங்களில் குடியமரவும் அங்கு தங்கி நின்றி தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்படவும் வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இனிவரும் நாட்களில் விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ள பகுதிகளில் காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.