அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு மெரினாவில் இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தாமல் இருப்பதற்காக மெரினா கடற்கரையின் வீதிகளில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு காவல் துறை தடை விதித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை என்பதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போல் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு மெரினாவில் இளைஞர்கள் ஒன்று கூடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து மெரினாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று அப்பகுதி வழியாக இரு சக்கர வாகனங்களுக்கும் தடை விதித்துள்ளனர். மெரினாவில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனிதாவின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணத்துக்கு நியாயம் கேட்டு திருப்பூரில் பெரியார்சிலைக்கு முன்பாக மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.