தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த வருடம் தமிழில் வெளியான 191 படங்களில் இருந்து 8 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் இருந்து 4 படங்களை 40 பேர் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் மூக நலன் பேசும் படைப்புகளுக்கு விருதளித்து கௌரவிக்கிறது . அந்தவகையில் ஜோக்கர் படத்துக்காக ராஜுமுருகனுக்கும் அப்பா படத்துக்காக சமுத்திரக்கனிக்கும் உறியடிக்காக விஜயகுமாருக்கும் விசாரணைக்காக வெற்றிமாறனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
அடக்குமுறையின் உருவமாகவே தன்னை அடையாளம் காட்டிவரும் காவல்துறையும், அதனிடம் சிக்கிக்கொள்ளும் அல்லது திட்டமிட்டுச் சிக்கவைக்கிற எளிய மனிதர்கள் மீதும், அப்பாவி மனிதர்கள் மீதும் ஏவல் விலங்காகக் கடித்துக் குதறுவதையும் துணிச்சலுடன் பேசிய விசாரணை திரைப்படத்திற்காக அதன் இயக்குநர் வெற்றிமாறனுக்கு விருது வழங்கப்பட்டது.
சான்றோர் ஆக்குகிறேன் என்ற பெயரில் குழந்தைகளின் கனவைச் சிதைத்துக் கேள்விகுறியாக்குகிறது இன்றைய கல்விமுறை. குழந்தைகளின் தனித்தன்மை வெளிக்கொண்டுவருவது குறித்தும், தனியார் கல்வி நிறுவனங்களின் பேராசைகள் குறித்தும் பொதுச் சமூகத்துக்கு எச்சரிக்கைவிடும் பணியை நேர்த்தியுடன் செய்த அப்பாதிரைப்படத்திற்காக அப்படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி விருது பெற்றார்.
ஒரு கிராமத்தில் வாழும் மனிதன் எதிர்கொள்ளும் பிரச்னையை மையப்படுத்தி, இந்திய அரசியலில் பீடித்திருக்கும் ஊழலையும் நடைமுறைகளையும் கூர்மையாக விமர்சித்து அதிகார வர்க்கத்தை நோக்கிக் கேள்விகளை எழுப்பிய ஜோக்கர் திரைப்படத்திற்க்காக ராஜுமுருகனுக்கு விருது வழங்கப்பட்டது.
பெரும்பாலான படங்களில் சாதியப் பெருமைகளைப் பேசிவந்த நிலையில், சாதியக் குரூர முகங்களைத் தோலுரித்துக் காட்டி, சாதிச் சங்கங்களில் பின்னப்பட்டிருக்கும் சூழ்ச்சிகளை வெளிகொணர்ந்த உறியடி படத்திற்காக அந்தப் படத்தை இயக்கி, தயாரித்து நடித்த விஜயகுமாருக்கு விருது வழங்கப்பட்டது.