தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக நேற்றையதினம் வீதி மறியலில் ஈடுபட்ட சுமார் 500 மீனவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் துறைமுகத்தில் மீன் இறங்கு தளத்தில் மீன் இறக்குவது தொடர்பாக அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகர் மீனவ கிராமங்களிடையே நிலவி வந்த பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு துறைமுகப் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் பலர் காயமடைந்ததுடன் இரு சக்கர வாகனங்கள், படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும்; சேர்ந்த 58 பேரை காவல்துறையினர் கைது செய்ததனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நம்பியார் நகர் மீனவர்கள் நேற்று காலை வீதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பல மணிநேரம் முற்றிலும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற அதிவிரைவுப் படை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட சுமார் 500 மீனவர்களை கைது செய்துள்ளதுடன் தொடர்ந்தும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.