பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி, இளவரசி கத்தரீன் மேலாடை இல்லாத புகைப்படத்தை பிரசுரித்த பிரான்சை சேர்ந்த குளோசர் பத்திரிகை, இளவரசிக்கும், அவரது கணவருக்கும் தலா 50 ஆயிரம் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் ; என பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு இளவரசர் வில்லியம் தம்பதியினர்; பிரான்சில் உள்ள புரோவான்ஸ் என்ற இடத்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட இப்படங்கள் அவர்களது அந்தரங்கத்தில் தலையீடு செய்யப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
படத்தை வெளியிட்ட குளோசர் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் உரிமையாளருக்கு நீதிபதி மிக அதிகபட்ச அபராதமான 45,000 யூரோக்களை அபராதமாக விதித்தார்.
மொட்டை மாடியில் கத்தரீன் சூரியக் குளியல் எடுக்கும் அந்தப் படங்கள், நீண்ட தொலைவில் இருந்து எடுக்கும் லென்ஸ் உதவியால் எடுக்கப்பட்டு, 2012ல் வெளியான குளோசர் பத்திரிகையின் அட்டைப் படத்திலும், உள்பக்கங்களிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இளவரசியின் நீச்சல் உடைப் புகைப்படங்களை வெளியிட்ட லா புரோவான்ஸ் என்ற பத்திரிகைக்கும் 3,000 யூரோ இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
குளோசர்; பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மற்றும் புகைப்படக் கலைஞர் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக நடைபெற்ற இந்த வழக்கில் படம் எடுத்தது, பிரசுரித்தது தொடர்பாக, அந்த ஆறு பேர் மீதான குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டன.
கடந்த மே மாதம் வழக்கு விசாரணை இடம்பெற்றபோது, இளவரசர் வில்லியம் வெளியிட்ட அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டது. அதில் விரட்டிப் படமெடுக்கப்பட்டதால் தமது தாய் டயானாவுக்கு நேர்ந்த அனுபவம் இருப்பதால், அந்தரங்க அத்துமீறல் மிகுந்த வலியைத் தருவதாகவும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.