குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியவுடன் பயிற்றுவிக்கப்படாத குடியேற்றவாசிகளான தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் குறித்து ஐரோப்பிய ஓன்றிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களில் தங்கியிருக்கும் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறியவுடன் பிரித்தானியா அந்த நாடுகளை சேர்ந்த பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது
நிறுவனங்கள் பிரித்தானியாவினைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவேண்டும் எனவும் பொருளதார தேவைகள் இருந்தால் மாத்திரம் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தலாம் என பிரித்தானிய அரசாங்கம் தயாரித்துள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன் காரணமாக பாரிய பாதிப்பு ஏற்படலாம் என வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. திடீர் என தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதால் பாரிய குழப்பம் ஏற்படலாம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் முழு உணவு விநியோகமும் பாதிக்கப்படலாம் என தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் விவசாயத்துக்கு உரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்ற அரசாங்கத்தின் தெளிவான விரைவான உறுதிமொழியை எதிர்பார்க்கின்றோம் என தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.