274
யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி குமாரசாமியின் 21ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அதன் போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூறப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1996ம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை செய்திருந்தனர்.
செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை ஊரவர்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59) மாணவியின் சகோதரனான யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35 ) ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்த வேளை அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.
அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் இராணுவத்தினர் புதைத்தனர். அதேவேளை யாழில் அக்கால பகுதியில் கடத்தப்பட்டவர்கள் , காணாமல் ஆக்கப்பட்ட அவர்கள் 600 பேருக்கும் அதிகமானவர்கள் செம்மணி வயல் வெளிகளில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love