புகையிரத விடுதி நில பேர ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் முன்னலையாகுமாறு லாலு பிரசாத் யாதவுக்கும் அவரது மகன் தேஜஸ்விக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பி உள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் புகையிரததுறை அமைச்சராக இருந்தபோது, ராஞ்சியிலும் பூரியிலும் அவரது அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு ஐஆர்சிடிசி விடுதிகளை பராமரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களை அளித்ததில் ஊழல் நடந்ததாக சிபிஐ குற்றம் சுமத்தியிருந்தது.
தனியார் விடுதி உரிமையாளர்களுக்கு தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒப்பந்தங்களை வழங்கியதாகவும், இதற்காக பாட்னாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பினாமி நிறுவனம் மூலம் லாலு பிரசாத் யாதவ் பெற்றுக் கொண்டதாகவும் சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது.
ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி , மகன் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இவ்வழக்கில் லாலு பிரசாத்திடமும் அவரது மகன் தேஜஸ்வியிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள சிபிஐ டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் எதிர்வரும் 11ம் திகதி நேரில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதிக்கு சொந்தமான டெல்லியில் உள்ள பண்ணை வீட்டை அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் கடந்த 5ம் திகதி முடக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.