குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி வன்னேரிக்குளம், குஞ்சுக்குளம் கிராமத்தில் உவரடைந்த நிலப்பரப்பில் ஆமணக்கு பயிர்ச் செய்கை மேற்கொள்வதென முடிவுகள் எடுக்கப்பட்ட போதும் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குஞ்சுக்குளம் கிராம மக்களினால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
மண்டைக்கல்லாறு வழியாக கடல் நீர் உட்புகுவதன் காரணமாக முழுமையாக உவரடைந்த குஞ்சுக்குளம் கிராமத்தில் கிராம மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்துள்ளதுடன் இக்கிராமத்தில் 450 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்செய்கை நிலம் உவர் நிலமாக மாற்றமடைந்ததுள்ளது.
இவ் உவர் நிலத்தில் ஆமணக்கு பயிர்ச் செய்கை மேற்கொள்வதென கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதிலும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மண்டைக்கல்லாறு வழியாக உவர் நீர் உட்புகுவதன் காரணமாக உவர் ஆபத்தினை எதிர்கொண்டுள்ள வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராமங்களைக் காப்பதற்கும் அதிகாரிகள் வாக்குறுதிகள் வழங்கியபடி நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் இரு கிராம மக்களும் தெரிவிக்கின்றனர்.
குஞ்சுகுளம் போன்று மேற்படி இரு கிராமங்களில் இருந்தும் ஆயிரம் வரையான குடும்பங்கள் எதிர்காலத்தில் உவர் ஆபத்தினால் இடம் பெயர வேண்டிய அபாய நிலை காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது