குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு அம்பலப்பெருமாள்குளம் வான்பகுதியினைப் புனரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 1968ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பலப்பெருமாள்குளம் குடியேற்றத்திட்டத்தில் குளத்தினை நம்பியே சுமார் நூறு குடும்பங்கள் வாழும் நிலையில் துணுக்காயிற்கும் அக்கராயனுக்கும் இடையில் பயணிக்கும் சகல வாகனங்களும் குளத்தின் வான் வழியாக பயணிப்பதன் காரணமாக வான்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது.
நெற்செய்கைக் கூட்டங்களில் குறித்த வான்பகுதியினைப் புனரமைத்துத் தருமாறு கிராம மக்களினால் வேண்டுகோள் விடுக்கின்ற போது சம்மந்தப்பட்ட திணைக்களமே வீதி புனரமைப்பின் போது குறித்த வான் பகுதியினைப் புனரமைத்துத் தருவதாக உறுதியளித்து உள்ளதாக அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏழாண்டுகளில் குறித்த வான்பகுதியில் புனரமைப்புப் பணிகள் இடம் பெறவில்லை. சிலவேளைகளில் குளம் நிரம்பி வான் வெள்ளம் பாய்கின்ற போது வான்பகுதியில் உடைவுகள் ஏற்பட்டால் குளத்தில் இருந்து முற்றாக நீர் வெளியேறுகின்ற அபாய நிலை உருவாகும். எனவே உடைந்த வான்பகுதியினை புனரமைத்துத் தருமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அம்பலப்பெருமாள் குளத்தில் பெரும்போகத்தில் அறுநூறு ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவது வழமையாகும்.