குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வன்முறைகளில் இருந்து தப்பியோடுவதற்காக ரொகிங்யா அகதிகள் பயன்படுத்தும் பாதைகளில் மியன்மார் இராணுவம் நிலக்கண்ணி வெடிகளை புதைப்பது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மோசமாக மீறும் செயல் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யூலி பிசப் குற்றம்சாட்டியுள்ளார்.
நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன எனவும் இது உண்மையானால் இதனை சர்வதேச சட்டங்களை மோசமாக மீறும் நடவடிக்கையாக கருதவேண்டும் எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மியன்மார் நிலக்கண்ணிவெடிகளிற்கு எதிரான உடன்படிக்கையி;ல் கைச்சாத்திடவில்லை என்பது தனக்கு தெரியும் எனினும் இது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகளின் மனிதாபிமான அமைப்புகள் ஊடாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அவுஸ்திரேலியா கவனம் செலுத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மியன்மாரிலும் பங்களாதேசிலும் உள்ள செஞ்சிலுவை சங்கங்களிற்கு அவுஸ்திரேலியா நிதியுதவிகளை வழங்குகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.