குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பே தெரியாத பிரபாகரனுக்கு, கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் 200 வருட சிறை தண்டனை விதித்தது என தீர்ப்பாயம் நேற்று தெரிவித்தது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) கூடியது.
அதன் போது, 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் , தொகுப்புரையின் போது , எனது தரப்பினர் குற்ற செயல் நடந்த கால பகுதியான 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி யாழ்.மாவட்டத்திலையே நிற்க வில்லை. அவர்கள் கொழும்பில் நின்றார்கள் அதற்கான சாட்சியங்கள் மன்றில் முற்படுத்தப்பட்டன என தெரிவித்தார்.
அதன் போது மன்று , உங்கள் தரப்பினர் மீதான குற்ற சாட்டு , குற்ற செயலுக்கு உடந்தை , திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றங்கள். இக் குற்றங்களை புரிவதற்கு அவர்கள் குற்ற சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தான் நிற்க வேண்டும் என்று இல்லை.
கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் கொழும்பே தெரியாத விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு உச்ச நீதிமன்றம் 200 வருட சிறை தண்டனை விதித்தது.
எனவே குற்ற செயலுக்கு திட்டம் தீட்டிய குற்ற சாட்டுக்கு உள்ளானவர்கள் குற்ற சம்பவம் நடைபெற்ற இடத்தில் நிற்க வேண்டும் என்று இல்லை. என தெரிவித்தனர்.