வி.கே.சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் டி.டி.வி.தினகரன் பெங்களூர் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்திக்கவுள்ளார். இதன்போது டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டிய கட்சியின் பொதுக் குழுவில், வி.கே.சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளுடன் கர்நாடக மாநிலம் கூர்க் விடுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் 20ம் திகதி தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் டிடிவி தினகரன் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று வி.கே.சசிகலாவை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றியும் வி.கே.சசிகலாவிடம் எடுத்துரைத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பார்கள் என டிடிவி தினகரன் தரப்பினரின் தகவல்கள் கூறுகின்றன.