என்னை வெற்றிபெற வைத்தவர் எச்.ராஜாதான்! சாரணர் இயக்கத்திற்கான தலைவர் மணி
என்னை வெற்றி பெற வைத்தவர் பாஜகவின் அகில இந்திய செயலாளர் எச்.ராஜா தான் என்று சாரணர் இயக்கத்திற்கான தலைவர் மணி தெரிவித்துள்ளார். சாரண இயக்கத்தைப் பற்றி தமிழ்நாடு முழுவதும் அறியச்செய்த ஹெச்.ராஜாவுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாரண சாரணிய இயக்கத்திற்கான தலைவர் பதவி தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநர் ப.மணி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜகவின் அகில இந்திய செயலாளர் எச்.ராஜா போட்டியிட்டார். இன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் எச்.ராஜா தோற்கடித்து மணி வெற்றிபெற்றார்.
மொத்தம் பதிவான 286 வாக்குகளில் எச்.ராஜா 52 வாக்குகள் மட்டுமே பெற்றார். மணி சுமார் 232 வாக்குகள் பெற்று அபார வெற்றியை பெற்றுள்ளார். சாரணர் தேர்தல் குறித்த செய்திகள் பெரும்பாலும் முக்கியத்துவம் பெறுவதில்லை. இந்த நிலையில், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரியவராக பேசப்படும் பாஜகவின் அகில இந்திய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுவதாக செய்திகள் வந்தபோது எதிர்ப்புக்கள் வலுத்தன.
சாரணர் தேர்தல் குறித்து பரவலான கவனம் ஏற்பட்டது. குறிப்பாக பாஜகவின் அகில இந்திய செயலாளர் எச்.ராஜாவை தோற்கடிக்கும் வகையில் இணையங்கள் ஊடகங்களில் கருத்துக்கள் வெளிப்பட்டன. இதனால் சாரணர் தேர்தல் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டது.
இதேவேளை, இயக்கத்தில் உள்ள குறைகளைக் களைந்து அனைத்து பள்ளிகளுக்கும் இயக்கத்தைக் கொண்டு செல்வோம். சாரண இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்றும் சாரணர் இயக்கத்திற்கான தலைவர் மணி மேலும் கூறினார்.