Home இலங்கை தமிழ் மக்கள் பேரவையும் புதிய அரசியல் அணி உருவாக்கமும் – நிக்ஸன்

தமிழ் மக்கள் பேரவையும் புதிய அரசியல் அணி உருவாக்கமும் – நிக்ஸன்

by admin


வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் மாத்திரமே வெற்றி பெறலாம் என ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் கருதுகின்றன. ஆனால் தேர்தல் அல்ல மக்களை ஒன்று திரட்டி அரசியல் கோரிக்கையை உறுதிப்படுத்துவதே பிரதானமாகும்.
அ.நிக்ஸன்.

தேர்தலில் வெற்றி பெறுவதை மாத்திரம் மையமாக வைத்து செயற்படுவதால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவதில் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் தயக்கம் காண்ப்பிக்கின்றன. தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டாமல் வேறு சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது என்ற மன நிலை அந்தக் கட்சிகளிடம் ஆழ பதிந்துள்ளது.

மக்களின் உறுதியான நிலை
வடக்கு கிழக்கு மக்களைப் பொறுத்தவரை பாரம்பரிய கட்சிகளுக்கு வாக்களித்து பழகியவர்கள் என்பது உண்மை ஆனாலும் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் அவ்வாறான பாரம்பரிய கட்சி அரசியலை விடுத்து அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான மாற்று ஏற்பாடுகள் அவசியம் என்பதை மக்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற 30ஆண்டுகால வரலாறுகள் என்பது வேறு.

அதற்கு பின்னரான சூழலிலும் அதன் தொடர்ச்சியாக அரசியல் உரிமையை ஜனநாயக வழியில் உறுதிப்படுத்துவதற்கான அமைப்பாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மக்கள் கருதினர். அதனால்தான் அத்தனை அழிவுக்குப் பின்னரும் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலலில் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

அரசாங்க நிகழ்ச்சி நிரல்
மக்கள் அவ்வாறான உறுதியான மன நிலையுடன் வாக்களித்து நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளுராட்சி சபை போன்றவற்றிக்கு தங்கள் சார்பான பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பினர். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளுக்குள் நின்றுகொண்டும், அரச சலுகைகளை பெற்றுக் கொண்டும் வேறு திசைக்குச் செல்கின்றனர். அதாவது அரசியல் உரிமையை உறுதிப்படுத்தும் வேலைத் திட்டங்களில் கவனம் செலுத்துவதை கைவிட்டு அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்றுகொண்டு இயங்குகின்றனர்.

இதன்காரணமாகவே மாற்று அரசியல் அணி குறித்து சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த மாற்று அணியை உருவாக்குவது யார் என்பதுதான் பிரச்சினை. இந்த இடத்திலேதான் தமிழ் மக்கள் பேரவை கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் ஆகியோரை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஒருவருடம் சென்ற நிலையிலும் கூட அந்த பேரவையினால் வேறு அணுகுமுறைகளை கையாள முடியவில்லை.

அரசியல் வரைபு மாத்திரமே
புதிய அரசியல் யாப்புக்கான வரைபு ஒன்றை எழுத்து மூலம் அரசாங்கத்திடம் கையளித்ததைத் தவிர, மக்களை அரசியல் மயப்படுத்திய வேலைத் திட்டங்கள் மிகவும் குறைவு எனலாம். இந்த நிலையில் தற்போது கூட்டமைப்பில் உள்ள ஈபிஆர்எல்எப் புதிய அணியை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து பேசுகின்றது. ஆனால் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளை தவிர்த்து ஏனயை கட்சிகளுடன் இணைந்து ஈபிஆர்எல்எப் புதிய அரசியல் அணி குறித்து சிந்தித்தால் என்ன?

புதிய அணியை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்காத அல்லது விரும்பாத அந்த கட்சிகளையும் இணைத்துக் கொண்டுதான் செயற்பட வேண்டும் என ஏன் ஈபிஆர்எல்எப் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றது? தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை முரண்பாடாக இருந்தாலும் வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமைதான் தீர்வு என்ற அடிப்படையில் ஒரே குரலாக இணைந்து செயற்படுவதற்கான சூழலை ஏன் உருவாக்க முடியாது?

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எப் அவ்வாறு செயற்பட முற்படும்போது ரெலோ புளொட் ஆகிய கட்சிகள் விரும்பியோ விரும்பாமலே புதிய அணியில் இணைய வேண்டிய தேவை ஏற்படும். ஆகவே அதற்கான அரசியல் சூழலை ஈபிஆர்எல்எப் தற்போதைக்கு தனித்து நின்றுதான் செய்ய வேண்டும். தற்போதைய தமிழ் அரசியல் சூழலில் இதை விட வேறு மார்க்கம் இருப்பதாக கூற முடியாது.

கற்றலோனியா போராட்டம்
ஸ்பெயின் நாட்டின் ஒரு அங்கமான கற்றலோனியா அரசியல் உரிமைப் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றது. 2012ஆம் ஆண்டு கற்றலன் என்ற தேசிய பேரவை ஒன்றை ஆறுபேருடன் உருவாக்கி ஆறு மாதங்களில் ஒன்றரை மல்லியன் மக்களை திரட்டி அஹிம்சை வழியிலான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. நாடாளுமன்றம் செல்வது அதன் நோக்கம் அல்ல. மாறாக கற்றலோனியன் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஸ்பெயின் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.

தேசிய சுதந்திர போராட்டத்தை வலுப்படுத்திய கற்றலோனியன் பேரவை இன்று ஸ்பெயின் அரசாங்கத்துடன் பேச்சு நடத்துகின்றது. ஆகவே மக்கள் சக்தியை எப்படி பயன்படுத்த முடியும் என்பதற்கு கற்றலோனியன் சுதந்திரப் போராட்டம் சிறந்த உதாரணமாகும். 1974 ஆம் ஆண்டு 11 கற்றலோனியா ஸ்பெயின் இராஜ்ஜியத்தின் அங்கமாக இணைக்கப்பட்டது. அன்று தமது தோல்வியை உணர்ந்த மக்கள் இன்று எவ்வாறு ஒன்றுசேர்ந்து சுதந்திர வேட்கையை வெளிப்படுத்துகின்றனர் என்பதை தமிழ் மக்கள் அறியவேண்டிய காலமிது.

சலுகை அரசியல் அணுகுமுறை
பட்டம் பதவி, தேர்தலில் மாத்திரம் வெற்றிபெறும் நோக்கம், அரசாங்க நிகழ்ச்சி நிiலுக்குள் நின்றுகொண்டு சுயநிர்ணய உரிமை பற்றி பேசுவது போன்ற அரசியல் அணுகுமுறை 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் பின்னரான பலவீனமாகும்.  தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்த பலவீனத்தை உணர்ந்து கொள்ள மறுக்கின்றது என்பதை விட தெரிந்து செய்கின்றார்கள் என்பதுதான் உண்மை. வேறு மாற்றுவழி இல்லை அரசாங்கத்துடன் சோந்து செயற்படுவதன் மூலம் எதையாவது பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவர்களின் கருத்தாகும்.

ஆனால் அரசாங்கத்துடன் சேர்ந்து இருக்கின்றதையும் இழக்கின்ற அரசியலைத்தான் மக்கள் கண்டுள்ளனர். குறிப்பாக 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் கூட உரிய முறையில் செயற்படுத்தப்படவிலிலை. இந்த நிலையில் இணக்க அரசியல் அல்லது சேர்ந்துபோகின்ற அரசியல் என்பது வடக்கு கிழக்கு மாகாணத்தை கலப்பு சமூதாயம் வாழும் பிரதேசமாக மாற்றியமைத்துவிடக் கூடிய ஆபத்துக்கள் உண்டு.

தமிழ் மக்கள் பேரவையின் கடமை
ஆகவே தமிழ் மக்கள் பேரவைக்கு கடமை ஒன்று உள்ளது. அதாவது பேரவையின் உறுப்பினர்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடமாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை புதிய அரசியல் அணிக்கான பலத்தை அல்லது வழிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். இளைய சமூகத்துக்கான அரசியல் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு அவர்களின் கருத்தை பெற வேண்டும். கற்றலோனிய மக்களின் சுதந்திரப் போராட்டங்கள் தொடர்பான விளக்கங்களை கொடுக்க வேண்டும். வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால்தான் வெற்றிபெற முடியும் என்ற சிந்தனையை உடைத்து, தேர்தல் அல்ல சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கோரிக்கையை நியாப்படுத்த வேண்டியதே இன்றை தேவை என்ற கருத்தையும் தமிழ்மக்கள் பேரவை உருவாக்க வேண்டும்?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More