குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதியான சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவினா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா் தெரிவித்துள்ளனா். இன்று 211 வது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்த ஜேர்மன் நாட்டு சட்டத்தரணியிடமே அவா்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனா்.
; யுத்தத்தின் போதும் யுத்தம் நிறைவுற்ற பின்னரும் தங்களுடை உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் எனவும் இவா்களில் பலா் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமக்கு தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் எனவும் அந்த நீதியானது சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே சாத்தியமாகும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கான அலுவலகம் ஏதனையும் செய்யாது எனவும் நாட்டின் ஜனாதிபதியால் நேரடியாக யாழ்ப்பாணத்தில் வைத்து தங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியே இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் ஜனாதிபதியின் உறுதிமொழியே நிறைவேற்றப்படாத நிலையில் ஒரு அலுவலகத்தினால் எதனை மேற்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினா்.
மேலும் தங்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரைக்கும் தாம் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவா்கள் ஜேர்மன் நாட்டு சட்டத்தரணியிடம் தெரிவித்தனா்