171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய முற்சித்தார்கள் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருந்த ஐந்து முன்னாள் போராளிகளையும் கடும் நிபந்தனைகளின் பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அனுமதித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்ய முயற்சித்தார்கள் எனும் குற்ற சாட்டில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த , காராளசிங்கம் குலேந்திரன் , ஞானசேகரலிங்கம் ராஜ்மதன் , முருகையா தவேந்திரன் , வேலாயுதன் விஜயகுமார் மற்றும் லூயிஸ் மரியநாயகம் அஜந்தன் ஆகியயோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐவரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்து புனர்வாழ்வு பெறப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
கைது செய்யப்பட்ட ஐவருக்கும் எதிராக போதைவஸ்து தடுப்பு கட்டளை சட்டம் , மணிசலவை தடுப்பு சட்டம் , பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்கல் மற்றும் ஊக்குவிப்புக்கு எதிரான சட்டம் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்க மறியலில் வைக்கப்பட்டு இருந்தனர்.
அந்நிலையில் குறித்த ஐந்து சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர்கள் சார்பில் யாழ்.மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யபப்ட்டது. குறித்த பிணை மனு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது , ஐந்து சந்தேக நபர்கள் சார்பிலும் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தில்லைநாதன் அர்ச்சுனா மன்றில் , குறித்த வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் முடிவடைந்து , கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு பரிசீலனையில் உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளிநொச்சி நீதிமன்றில் தெரிவித்து உள்ளனர்.
அதேவேளை குறித்த ஐந்து சந்தேக நபர்களும் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவரின் குழந்தைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு குழந்தையின் தகப்பனின் அனுமதி பெற வேண்டி உள்ளது. தகப்பன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமையினால் குழந்தையின் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை கானபப்டுகின்றது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்ய முயற்சித்தார்கள் என இவர்கள் மீது குற்றம் சுமத்தபப்ட்டு இருந்தாலும் , அது தொடர்பிலான எந்த அறிக்கையையும் கிளிநொச்சி நீதிமன்றில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை.
எனவே குறித்த ஐந்து சந்தேக நபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை தொடர்ந்து அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் , பிணை மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து விண்ணப்பம் செய்தார். அதில் , கொலை செய்ய திட்டம் தீட்டிய குற்ற சாட்டில் குறித்த ஐந்து சந்தேக நபர்களை தவிர ஆறாவது சந்தேக நபராக அவுஸ்ரேலியா நாட்டில் வசிக்கும் ஒருவர் உள்ளார். அவர் தான் குறித்த ஐந்து சந்தேக நபர்களையும் வழிநடத்தினார். எனும் சந்தேகிக்கும் நபராவார்.
குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கு , பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவுஸ்ரேலியா சென்று அங்கு அதிகாரிகளுடன் பேசி சிலரது சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளனர். அத்துடன் குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகளையும் முன்னேடுக்க உள்ளனர்.
அதேவேளை குறித்த ஐந்து சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல அனுமதித்த உடன் இவர்கள் அனைவரும் கடல் மார்க்கமாக இலங்கையை விட்டு தப்பி செல்ல உள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க கூடாது என மன்றில் பிணைக்கு ஆட்சேபனை தெரிவித்து விண்ணப்பம் செய்தார்.
இரு தரப்பினரின் விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிபதி , குறித்த ஐந்து சந்தேக நபர்களும் , கடந்த ஒன்பது மாதங்களாக விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
அந்நிலையில் அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் போராளிகள் என்பதனால் தொடர்ந்து விளக்க மறியலில் வைத்து இருக்க முடியாது. இவர்களுக்கு எதிரான இந்த குற்றசாட்டு நிரூபிக்கப்படும் வரையில் இவர்கள் நிரபராதிகளே , அந்த வகையில் நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்க படுகின்றார்கள்.
குறித்த ஐந்து சந்தேக நபர்களும் , தலா 10 ஆயிரம் ரூபாய் காசு பிணையிலும் , தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் செல்ல அனுமதிக்க ப்படுகின்றனர். அத்துடன் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் , கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கையொப்பம் இட வேண்டும் மற்றும் கடவுசீட்டுக்களை கிளிநொச்சி நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் அடிப்டையில் ஐந்து சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவு இட்டார்.
Spread the love