Home இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வில் அதிகரங்கள் விரியுமா, சுருங்குமா? – செல்வரட்னம் சிறிதரன்:-

இனப்பிரச்சினைக்கான தீர்வில் அதிகரங்கள் விரியுமா, சுருங்குமா? – செல்வரட்னம் சிறிதரன்:-

by admin

இந்த வருடம் செப்டம்பர் மாத நடுப்பகுதியாகிய இந்த வாரம் இலங்கை அரசியலில் மிகந்த முக்கியத்துவம் மிக்க கால கட்டமாக அமைந்துள்ளது.

குறிப்பாக இந்த மாதத்திற்குரிய நாடாளுமன்ற அமர்வில் மூன்று முக்;கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளன. அவற்றில் நல்லாட்சி அரசாங்கத்;தின் அடிப்படை குறிக்கோள்களில் ஒன்றாகிய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இரண்டாவதாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, மாகாண சபைகளுக்கான தேர்தலில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான, 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமும் கொண்டு வரப்படவுள்ளது. கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள இந்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்றாவதாக ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாகப் பிரகடனப்படுத்துவதற்கான சட்ட வரைபும் நாடாளுமன்றத்தின் இந்த மூன்று நாள் அமர்வின்போது சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆயினும் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த இந்தத் தீர்மானத்தில் இப்போது மாற்றம் செய்யப்பட்டு, இந்த சட்ட வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது பின்போடப்பட்டிருப்பதாகப் பிந்திய தகவல் ஒன்று கூறுகின்றது.

இராணுவம் பாதிக்கப்படும் என்ற அச்சம்

இந்த சட்டமூலம் கொண்டு வரப்படுவதை மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரும், பௌத்த மகாசங்கத்தினரும், சிங்களத்தீவிர அரசியல்வாதிகளும் ஒரே முகமாக இணைந்து கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பில் பொது எதிரணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்களையடுத்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள பொறிமுறைகளில் ஒன்றாகிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. நீண்ட தாமததத்தின் பின்னர் உருவாக்கப்படவுள்ள இந்த அலுவலமகானது காணாமல் போயுள்ளவர்கள் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்தாலும்கூட, ஆட்களைக் காணாமல் ஆக்கியமைக்குப் பொறுப்பானவர்கள் எவரையும் நீதியின் முன் நிறுத்துவதற்கோ அல்வது, அவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதற்கோ உரிய அதிகாரங்கள் அதற்கு வழங்கப்படவில்லை.

சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், வலிந்து ஆட்களை காணாமல் போகச் செய்ததொன்பது பாரிய குற்றச் செயலாகும். இந்தக் குற்றச்செயலுக்கு இராணுவத்தினரே பொறுப்பு என்பது எல்லோருக்கும் தெரிந்தவொரு விடயமாகும். விடுதலைப் புலிகள் மீதும் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்ற போதிலும், இறைமையுள்ள அரசாங்கம் ஒன்றின் ஆயுதப்படையாகிய இராணுவம் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பது சாதாரண விடயமல்லை. அது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகவும், போர்க்குற்றச் செயலாகவுமே நோக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பலவந்தமாக ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாகப் பிரகடனப்படுத்தியுள்ள சர்வதேச சாசனத்தை ஏற்று நடைமுறைப்படுத்துவதாக ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்ட அரசாங்கம், அதற்கான சட்டத்தை உள்நாட்டில் உருவாக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இதற்கான சட்ட வரைவு கடந்த வருடமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருந்தது.

எனினும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, வலிந்து ஆட்களைக் காணாமல் போகச் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பதற்கு வசதியாகப் போய்விடும் என்பதால், எந்தவொரு இராணுவ வீரரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படக் கூடாது என்ற காரணத்திற்காக பௌத்த மகாசங்கத்தினர் இந்த சட்ட வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை எதிர்த்திருந்தனர். அதனையடுத்து, அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்து, இப்போது நாடாளுமன்றத்தில் அதனைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

நிலைமாறுகால நீதியை நிலைநிறுத்தும் வகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொட்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள இந்த சமயத்தில் ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்;தில் நிறைவேற்றப்பட்டால், ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்குக் காரணமானவர்கள் அதற்கான அலுவலகத்தின் மூலம் இனம் காணப்படுவது இராணுவத்தைக் காட்டிக்கொடுப்பதற்கு சாதகமாகிவிடும் என்ற காரணத்திற்காகவே இராணுவத்தை வெற்றி வீரர்களாகவும், சிங்கள மக்களின் கதாநாயகர்களாகவும் கருதுகின்ற பொது எதிரணியினர், மகாசங்ககத்தினர் மற்றும் சிங்களத் தீவிர அரசியல்வாதிகள் இணைந்து அதனை எதிர்த்துள்ளனர்;.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நாடாளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் அது, இந்த இடைக்கால அறிக்கையை ஆhயவுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தலைமை நிலையில் வழிநடத்துவதற்காக வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு அடுத்த்தாக 6 உப குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்ந்து வழிநடத்தல் குழுவுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

புதிய அரசியலமைப்புக்கான சகல விடயங்களும் இந்தக் குழுக்களினால் அலசி ஆராயப்பட்டு, அவை தொடர்பிலான கருத்துக்களின் அடிப்படையில் உரிய பரிந்துரைகளும் அந்த அறிக்கைகளில் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை உள்ளடக்கி வழி நடத்தல் குழுவானது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை அரசியல் நிர்ணய சபையாகிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் புதிய அரசியலமைப்பில் முக்கியமாகக் கருதப்படுகின்ற விடயங்கள் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது வெளிச்சத்திற்கு வரும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இடைக்கால அறிக்கை கடந்த வருட இறுதிப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசியலமைப்புக் குழுவின் செயலாளர் நீல் இடவெல முன்னர் அறிவித்திருந்தார். ஆயினும் அது சமர்ப்பிக்கப்படவில்லை. பல தடவைகளில் பின்போடப்பட்டிருந்தது. சில முக்கிய விடயங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படாததன் காரணமாகவே இடைக்கால அறிக்கையை அரசியல் நிர்ணய சபையாகிய நாடாளுமன்றத்தில் உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. சமர்ப்பிப்பதற்கு முடியாமல் போய்விட்டது என அரசாங்கம் தெரிவித்திருந்தது.

பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இந்த இடைக்கால அறிக்கையில் என்ன கூறப்படுகின்றது என்பதை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியிருந்தார்கள்.

புதிய அரசியலமைப்புக்கான சட்ட வரைபுக்கும், இடைக்கால அறிக்கைக்கும் இடையில் பல வித்தியாசங்கள் இருப்பதுவும் இந்தத் தாமதத்திற்கு முக்கிய காரணம் என அரசியலமைப்புச் சபையின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். புதயி அரசியலமைப்பானது ஆறு முக்கிய விடயங்களில் உள்ளடக்கப்பட்டு, அவை தொடர்பில் வழிநடத்தல் குழு பல தடவைகள் கூடி விவாதித்துள்ளது. அதேபோன்று இந்த அறு விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உப குழுக்கள் ஆறும் தமது அறிக்கைகளை ஏற்கனவே வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்பட்டுவிட்டது.

ஒற்றையாட்சியும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையும்

பௌத்த மதமே நாட்டின் உயர் ஸ்தானத்தில் இருக்கும். ஏனைய மதங்களைப் பின்பற்றுவதற்குரிய சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும். இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இது குறித்து எந்தவித விவாதங்களும் நடத்தப்படமாட்டாது. இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, நாட்டைத் துண்டாட முடியாத வகையிலான ஒற்றையாட்சி முறையிலும் எந்தவித மாற்றங்களும் இருக்கமாட்டாது என்பதிலும் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பகிரப்பட்ட இறைமையை அடிப்படையாகக் கொண்டதும், சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதுமான சமஷ்டி ஆட்சி முறையே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழியாகும் என்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி முறையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றம் செய்யப்படமாட்டாது என்பது அரச தரப்பினதும், பெரும்பான்மையினராகிய சிங்கள அரசியல் தரப்பின் அழுங்குப் பிடியாகும். தமிழர்கள் கோருகின்ற சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கலானது நாட்டில் பிரிவினைக்கே வழிவகுக்கும் என்பதும், சிங்கள அரசியல் தரப்பின் ஆணித்தரமான நிலைப்பாடாகும். ஆகவே, ஒற்றை ஆட்சியா, சமஷ்டியா என்பது குறித்து எதிரும் புதிருமாக விவாதித்து, காலத்தைக் கடத்திக்கொண்டிருப்பதைத் தவிர்;த்து ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங்கள சொற்பதத்தை ஏற்றுக்கொண்டு, அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்த விடயங்களில் கவனம் செலுத்துவது என்று தீரமானிக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

முரண்பட்ட நி;லைப்பாடு

கூட்டமைப்பின் தேர்தல் ஆணையாகிய இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடைய பகிரப்பட்ட இறையாண்மையுடன் கூடிய சமஷ்டி ஆட்சி முறை என்ற அடிப்படைக் கொள்கைக்கு மாறாகவே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆயினும் தமிழ் மக்கள் தேர்தல் மூலமாக வழங்கியுள்ள ஆணையாகிய சமஷ்டி முறையிலான தீர்வுக்காக, கூட்டமைப்பு தொடர்ந்து பாடுபடும் என்று சொல்லப்பட்டு வருகின்றது. புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்பதில் உறுதியாகவுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்படுகின்ற எந்தவோர் அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் ஒப்புதலின்றி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மொத்தத்தில் வரப்போவதாகத் தெரிவிக்கப்படுகின்ற அரசியல் தீர்வில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கையாகிய பகிரப்பட்ட இறையாண்மையையும், சுயநிர்ணய உரிமையையும் உள்ளடக்கிய சமஷ்டி ஆட்சி உள்ளடக்கப்பட்டிருக்குமா இல்லையா என்பது குறித்த தெளிவான நிலைப்பாடு இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆனால் புதிய அரசியலமைப்புக்கான சட்டமூல வரைபுடன் ஒத்துச் செல்வதாகத் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையானது, பௌத்த மதத்திற்கே முன்னுரிமை என்பதிலும், ஒற்றையாட்சியே தொடர்ந்து நிலவம் என்பதிலும் எத்தகைய மாற்றங்களும் செய்யப்படமாட்டாது என்பதை வலியுறுத்தியிருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பிலேயே விவாதங்கள் முற்றுப் பெற்றிருக்கவில்லை என அரசியலமைப்புக் குழுவின் தலைவராகிய ரணில் விக்;கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாகாணசபை

முப்பது வருடங்களுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் மாகாணசபை முறையிலான அதிகாரப் பரவலாக்கலுக்கு வழிசமைத்திருந்தது. அந்த நேரம் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக இருந்த தமிழர்விடுதலைக் கூட்டணி அதனை எதிர்;த்திருந்தது. முழுமையானதோர் அதிகாரப் பகிர்வை எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு ஆனைப்பசிக்கு சோளப்பொறி போட்டதைப் போலவே மாகாண சபையின் ஊடான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டிருந்தன.

ஆயினும் எதிர்ப்புக்கு மத்தியிலும் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டு அதற்காக 13 ஆவது அரசியல் திருத்தச்சட்டமும் நிறைவேற்றப்பட்டது. வடக்கும் கிழக்கும் இணைந்த நிலையில் உருவாக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணசபை நிர்வாகத்தை அப்போது இநதியாவுடன் நெருங்கிச் செயற்பட்டிருந்த ஈபிஆர்எல்எவ் தேர்தல் ஒன்றின் மூலம் பொறுப்பேற்றிருந்தது. ஆயினும் ஒரே ஒரு தடவை மாத்திரம் செயற்பட்டிருந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலும் கடைசியுமான ஒரே முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் பதவி ஏற்றிருந்தார்.

ஆயினும் அந்த முதலமைச்சருடைய அலுவலகத்திற்குரிய மேசை கதிரைக்குக்கூட வழியில்லாத ஒரு நிலையிலேயே அந்த சபையின் அதிகாரங்கள் அமைந்திருந்தன எனக் கூறி, ஒருதலைப்பட்சமாக ஈழத்தைப் பிரகடனம் செய்துவிட்டு இந்திய அமைதிப்படையினருடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தார்.

இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டிருந்தது. இதற்காக 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டிருந்தது. இருப்பினும் வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்படவில்லை. வடமத்திய மாகாணம், வடமேல் மாகாணம், சபரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் ஆகிய நான்கு மாகாணங்களின் மாகாண சபைகளுக்கான தேர்தலே 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதலில் நடத்தப்பட்டது. ஆனால் 6 மாதங்களுக்குப் பின்னர் 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதியே இணைந்த வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

ஒருதலைப்பட்ச ஈழுப்பிரகடனத்துடன் வடகிழக்கு மாகாணசபை 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் கலைக்கப்பட்டது, வடகிழக்கு மாகாணசபை ஆட்சி முறை உருவாக்கப்பட்டமைக்கு, சிங்கள தேசியவாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். ஆயினும் வடகிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டதன் பின்னர் பதினாறு வருடங்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் செயற்பட்டு வந்தது. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் தலைமையில் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழுவின் முன்னால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு ஒன்றில் வடக்கையும் கிழக்கையும் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கும் வரலாற்று வடுவாகக் கருதப்படுகின்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதிகாரங்கள் விரியுமா, சுருங்குமா?

வடகிழக்கு மாகணம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாணம் கந்தளாயைச் சேர்ந்த ஜயந்த விஜேசேகர, சம்மாந்துறையைச் சேர்ந்த மொகமட் புஹாரி, உகணையைச் சேர்ந்த வசந்த பியதிஸ்ஸ ஆகிய மூன்று பேரும் இணைந்து தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த்தச் சட்டத்தின் கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறையிலான அதிகாரப் பரவலாக்கம், நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் மேலும் விரிவுபடுமா அல்லது இன்னும் ஒடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.

தங்களைத் தாங்களே ஆள்கின்ற சுதந்திரமான ஆட்சி அதிகாரத்தைக் கொண்ட அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறையை உள்ளடக்கியதாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பது சாதாரண தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தமிழர் விடுதலைக்கூட்டணியினால் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அதற்கான அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆயினும் தமிழ் இளைஞர்கள் வேகம் குறைந்த மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாட்டில் அதிருப்தி கொண்டிருந்ததையடுத்தே, ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற்றது.

ஆனாலும் தனிநாட்டுக்கான ஆயுத ரீதியான அரசியல் போராட்டம், பல வருடங்கள் நீடித்து இறுதியில் 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

யுத்தத்திற்குப் பின்னரான தமிழ் அரசியலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துள்ள அரசியல் இராஜதந்திர நடவடிக்கைகள் கடந்த எட்டு வருடங்களில் தமிழ் மக்களின் இழந்த உரிமைகள் எதனையும் உருப்படியாகப் பெற்றுத் தந்ததாகத் தெரியவில்லை.

விடுதலைப்புலிகளின் ஆயுதப் பலத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டிருந்த தமிழ் மக்களின் அரசியல் பலம் 2009 ஆம் ஆண்டுடன் சிதைந்து போனது. அதற்குப் பின்னர் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கென வலுவானதோர் அரசியல் கட்டமைப்பை உருவாக்க முடியாமல் போயிருகிகின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது புளியம்பழத்து ஓட்டைப் போன்று ஒன்றையொன்று கொள்கை ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் பற்றுப் பிடிப்பில்லாத ஓர் அமைப்பாகத் திகழ்கின்றது. அது தேர்தலை மையப்படுத்தியதாகவே தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதையே காண முடிகின்றது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பலம் வாய்ந்ததோர் அரசியல் அமைப்பாக அது இன்னும் பரிணமிக்கவில்லை.

இந்த நிலையில் அரசியல் முக்கியத்துவம் மிகுந்த இந்தச் சூழலில் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டின் மூலம் அரசியல் தீர்வுக்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்திருக்கின்றதா இல்லையா என்பது இடைக்கால அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More