பிபிரதமர் மோடியுடன் விவாதித்து இந்திய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம், ஜூன் 30ம் திகதியுடன் முடிந்த காலாண்டில் 5.7 சதவீதம் ஆக சரிந்துள்ளது எனவும் இது 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த வளர்ச்சி வீதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, பண வீக்கத்தைப் பொறுத்தமட்டில் 4 சதவீதம் என்ற பணக்கொள்கை இலக்குக்குள்தான் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
பருவமழைக் காலத்தில் காய்கறி விலைகள் சாதாரணமாக உயரும். இது உயரும் காலம். இந்த காலகட்டத்தில் 3.6 சதவீதம் என்பது பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையே காட்டுகிறது. ஓகஸ்டு மாதம் சில்லறை பணவீக்க விகிதம் 5 மாதங்களில் இல்லாத உயர்ந்தபட்ச அளவாக 3.36 சதவீதமாக இருந்தது. கைவசமுள்ள அனைத்து பொருளாதார குறியீடுகளையும் கவனத்தில் கொண்டுள்ளோம். தேவைப்படுகிற எந்தவொரு கூடுதலான நடவடிக்கையையும் அரசு எடுக்கும்.
பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விட ஏதுவாக கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது பற்றி செயலாற்றி வருவதாக தெரிவித்த அவர் . இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறினார்.