புதிய அரசியல் யாப்பின் ஊடாக அடிப்படை மற்றும் உச்ச அளவிலான சட்ட நடைமுறைகளுடன் புதிய எதிர்காலமொன்றை ஏற்படுத்துவது இலங்கைக்கு அவசியம் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று இலங்கைக்கு கிட்டியுள்ளதென குறிப்பிட்டுள்ள சம்பந்தன், இதனை பயன்படுத்தி நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் பேசும் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நீண்டகால இலக்கை அடைய இதுவே வழியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.