போலி கனேடியன் டொலரை மாற்ற முயன்ற இருவர் நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்.பொலிஸ் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
யாழ்.நகரில் உள்ள வெளிநாட்டு நாணய தாள்கள் மாற்றும் நிலையம் ஒன்றுக்கு சென்ற இளைஞர் ஒருவர் 10ஆயிரத்து 100 கனேடியன் டொலர் நாணய தாள்களை மாற்றுவதற்கு கொடுத்துள்ளார்.
குறித்த நாணய தாள்களை பரிசோதித்த போது அவை போலி கனேடியன் டொலர்கள் என கண்டறியப்பட்டதை அடுத்து நாணய தாள் மாற்றும் நிலைய உரிமையாளர் யாழ்.பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனை அடுத்து அங்கு விரைந்த புலனாய்வாளர்கள் போலி டொலர்களை மாற்ற முயன்ற இளைஞரை கைது செய்து யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்கள்.
அதன் போது குறித்த டொலர்களை மாற்றி வருமாறு சித்தன்கேணி பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரே தன்னிடம் தந்ததாக குறித்த இளைஞர் வாக்கு மூலம் அளித்துள்ளார். அதனை அடுத்து குறித்த வர்த்தகரையும் புலனாய்வாளர்கள் கைது செய்து , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.