குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியா உங்கள் உறுதியான நண்பனாகவும் சகாவாகவும் திகழும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஓன்றியத்திற்கு உறுதியளித்துள்ளார். இத்தாலியின் புளோரன்சில் ஆற்றிவரும் உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா உங்கள் வலுவான சகாவாகவும் நண்பனாகவும் விளங்க விரும்புகின்றது என தெரிவித்துள்ள அவர் எனினும் ஐரோப்பிய ஓன்றியத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பிரித்தானியா முழுமையாக திருப்தியடைவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவை எடுத்துள்ள போதும் உணர்வுரீதியில் நாங்கள் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஐரோப்பிய பிரஜைகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் போது பிரித்தானியா கருத்தில் கொள்ளும் எனவும் பிரித்தானியா வெளியேறிய பின்னர் உருவாகக்கூடிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான உறுதியான பொறிமுறைகள் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் காவல்துறை விவகாரங்கள் குறித்து ஐரோப்பிய ஓன்றியத்துடன் புதிய உடன்படிக்கையை மேற்கொள்ள பிரித்தானியா விரும்புகின்றது என்பதுடன் ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து பிரித்தானியா உறுதியாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் 2020 வரை ஐரோப்பிய ஓன்றிய வரவு செலவு திட்டத்திற்கு பிரித்தானியா நிதிவழங்கும் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்