லண்டனில் ஊபர் (uber) தனியார் வாடகைக் கார் நிறுவனம் வாகனங்களை தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என லண்டன் போக்குவரத்துக்குப் பொறுப்பான டி.எல்.எஃப் ( DLF ) தெரிவித்துள்ளது. இந்த பயண நிறுவனம், தனியார் வாகன சேவையை நடத்த தகுதியற்றது என டிஎல்எஃப் தெரிவித்துள்ளது
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான விளைவுகளைக் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நெரிசல் உருவாக்குதல், பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களை சமர்பிக்க தவறுதல், ஓட்டுநர்கள் மீதுள்ள புகார்களை சரிவர விசாரிக்காமல் விடுதல் மற்றும் அதன் வாகனங்களினால் அதிகரித்து வரும் விபத்துகள் ஆகியன ஊபர் மீதான குற்றச்சாட்டுக்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ள ஊபர், மிகவும் வெளிப்படையான செயல்பாட்டை உலகுக்கு வெளிக்காட்டியதாகவும், நவீன செயல்பாடுடைய நிறுவனங்களுக்கு லண்டன் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
லண்டன் நகரில் சுமார் 35 லட்சம் மக்களும் 40 ஆயிரம் வாகன சாரதிகளும் ஊபர் செயலியை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.