குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
32 ஆண்டுகள் போராட்டத்தின் மூலம் வென்றெடுக்க முயாத ஈழத்தை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மனோ கணேசனுடன் ஓர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், இதன் போது மனோ கணேசன் ஒன்றிணைந்த இலங்கை என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கையா அல்லது ஒன்றிணைந்த இலங்கையா என தாம் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு மனோ கணேசன் நேரடியாக பதிலளிக்கவில்லை எனவும் ஹேமகுமார நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய இலங்கை என்பதற்கு பதிலாக ஒன்றிணைந்த இலங்கை என பெயரிடவே முயற்சிக்கப்படுகின்றது எனவும் புதிய அரசியல் சாசனம் குறித்த உத்தேச பரிந்துரைகளில் அதிகாரம் பகிர்வது தொடர்பான விடயங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே அலகாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்டைய மாகாணசபைகள் இரண்டு அல்லது மூன்றை மக்களின் விருப்பத்தைக் கேட்டு இணைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் மூலம் பெற்றுக்கொள்ள முடியாத ஈழத்தையே, அரசியல் சாசனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.