முகநூல், வட்ஸ்அப்புக்கு தடை விதிக்கக்கோரி வி.டி.மூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு தொடர்பாக மத்திய அரசு எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகநூல், வட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்கள், இணையவழி தொலைபேசி சேவைகளை வழங்கி வருகின்ற போது அவற்றில் பயன்படுத்தப்படும் சங்கேத குறியீடுகள், விசாரணை அமைப்புகளால் கண்டுபிடிக்க முடியாதவாறு உள்ளன எனவும் இவற்றை பயங்கரவாதிகள் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்து வருகிறார்கள் எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இதனால் முகநூல், வட்ஸ்அப் ஆகியவற்றின் தொலைபேசி அழைப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால், அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், அரசுக்கு இழப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரார் இவற்றை ஒழுங்குபடுத்துவது பற்றி முடிவு எடுக்கும்வரை, குறித்த வலைத்தளங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு, விசாரணைக்கு வந்த நிலையிலேயே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது