குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று (23.09.2017) முற்பகல் 10 மணிக்கு யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் வட மாகாண சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஸ்ட காவல்துறை அதிகாரி பாலித சிறிவர்த்தன, யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் பாலித பெர்னாந்து, முல்லைதீவு சிரேஸ்ட காவல்துறை அதிகாரி கந்தவத்த, மன்னார் உதவி காவல்துறை அத்தியட்சகர் சிறிவர்த்தன மற்றும் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், அந்தரங்க செயலர் ஜே.எம்.சோமசிறி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செயற்பட்டுவந்த ஆவா குழுவின் செயற்பாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் மது போதையில் வீதிகளில் மக்களுக்கு இடையூறு விளைவிப்போர் மற்றும் போதைவஸ்து பாவனையாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. தமிழ் பேசும் பொலிஸார் குறைவாக காணப்படுவதனால் பணிகளை தமிழ் மொழில் மேற்கொள்வதில் சிரமங்கள் நிலவுவதாகவும் ஆளுநரிடம் தெரிவித்தனர்.
மேலும் அனுமதியற்ற வகையில் வீதீ ஓரங்களில் இந்து, பௌத்த, கிறிஸ்த சமயங்களின் தெய்வங்களை அமைப்பதன் காரணமாக வீண் பிரச்சினைகள் சமூகங்களுக்கு இடையில் எழுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இங்கு கருத்து வெளியிட்ட ஆளுநர் றெயினோல் கூரே தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை காவல்துறை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி வடக்கு வாழ் தமிழ் இளைஞர் யுவதிகள் காவல்துறை சேவையில் இணைந்து கொள்ள அனைத்து தரப்பினரும் இளைஞர் யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முக்கிய நகரங்கள் மற்றும் பொதுமக்கள் செறிந்து காணப்படும் பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்காண்பதற்காக சிசிரிவி கமராக்களை பொருத்துவதற்கு ஆலோசித்துள்ளதாகவும். அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கூறினார்.
அனுமதியற்று வீதி ஓரங்கள் மற்றும் மரங்களின் கீழ் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வரும் சிலைகள் தொடர்பில் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன், கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, பௌத்த விவகாரங்களுக்கான அமைச்சர் காமினி ஜெயவிக்கரம பெரேரா ஆகியோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.