இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. முதல் நாளான நேற்றிரவு, பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன், பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து, பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தபடி, ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று, சுவாமிக்கு சமர்பித்துள்ளார்.
பின்னர் ஆலய தேவஸ்தானம் சார்பில் அச்சிடப்பட்ட 2018 ஆண்டு காலண்டர் மற்றும் டைரிகளை சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.
இதேவேளை, விஜயவாடாவை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்திய பக்தரான ராமலிங்கராஜூ என்பவர், 8 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பில் சுமார் 28 கிலோ எடை கொண்ட தங்கத்தால் ஆன 1008 சகஸ்கர லட்சுமி காசு மாலையை, கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தினார்.
பிரம்மோற்சவத்தை ஒட்டி, இலட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர். திருமலை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி – திருமலை இடையே 500 பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. .