சிறுமிகளை மாத்தம்மன் கோவிலுக்கு அர்ப்பணிக்கும் நடைமுறை குறித்து, 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கோரி தமிழக, ஆந்திர அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மற்றும் இவற்றின் அருகாமையில் உள்ள பகுதிகளில் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் கிடைத்துள்ளன. மேற்கண்ட இரு மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில், வேண்டுதலின்படி சிறுமிகளை வலுக்கட்டாயமாக மாத்தம்மன் கோவிலுக்கு நேர்ந்து விடுவதாக கூறப்படுகிறது.
இது தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே பல ஆண்டுகளாக இருந்து வந்த தேவதாசி முறையின் வேறொரு வடிவம் எனவும் இது மனித உரிமைகள் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் சிறுமிகள் மணமகள்களை போல் அலங்கரிக்கப்பட்டு இதற்கான சடங்கில் ஈடுபடுத்தப்படுவதாகவும், சடங்கு மற்றும் பூஜை முடிவடைந்த பிறகு அந்த சிறுமிகளின் ஆடைகள் 5 சிறுவர்களை கொண்டு களையப்பட்டு ஏறத்தாழ நிர்வாணமாக்கப்படுவதாகவும், பிறகு அந்த சிறுமிகள் தங்கள் பெற்றோருடன் வாழ அனுமதி மறுக்கப்படுவதாகவும் அந்த முறைப்பாடுகளில் தெரிவிக்கின்றன.
மேலும் அந்த சிறுமிகள் கல்வி கற்க அனுமதி மறுக்கப்படுவதோடு, அவர்கள் மாத்தம்மன் கோவிலில் தங்கவைக்கப்பட்டு பொதுச்சொத்து போல நடத்தப்படுவதாகவும், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகவும் ஆணையத்துக்கு வந்துள்ள முறைப்பாடுகளில் கூறப்பட்டு உள்ளது.
இந்த சடங்குகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிரான புகார்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் தீவிரத்தன்மை கொண்டவை. இது உண்மை என்றால், இது மனித உரிமை மீறலாகும். குழந்தைகளுக்கான அடிப்படை உரிமை மீறல் மட்டுமின்றி அவர்களுக்கு கல்விக்கான உரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமையை மறுக்கும் வன்முறை செயல் ஆகும்.
எனவே, இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துளை டைரக்டர் ஜெனரல்கள், திருவள்ளூர், சித்தூர் மாவட்ட நீதிபதிகள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் இதுகுறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.