ஐக்கியநாடுகள் மனித உரிமை சபையில் உரையாற்றிய வைகோவை இலங்கையின் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுவோரால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதனை அடுத்து, ஐநா சபை அவருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் சபையில் பேசிய வைகோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார். மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை பெற்ற நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியேறிய வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்துத் திட்டினார் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து வைக்கோவை சூழ்ந்த சில பெரும்பான்மையினத்தவர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வைகோவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. எனினும், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என வைகோ வாதாடியுள்ளார்.பிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு சென்று விட்டுள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “போர்க்குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் வீரசேகரா தலைமையிலான சிங்களர்களே தகராறு செய்தனர். நீங்கள் தற்கொலை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நானும் பதில் பேசினேன். ஆனால், அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளனர். நான் பேசுவதை மட்டுமே வீடியோவில் பதிவு செய்தனர்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் வைகோவை தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ் அமைப்பினர் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனையடுத்து வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் வைகோவின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.