வட மாகாணத்தில் 16 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் மற்றும் இராணுவ சுற்றாடலுக்குள் இயங்கி வருகின்றன எனத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவை தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் பல இடங்களில் இராணுவம் தங்கள் முகாம்களை அகற்ற இணக்கம் காட்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்திலேயே அதிக பாடசாலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது எனவும் குறிப்பாக, யாழ். மாவட்டத்தில் 11 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் அல்லது இராணுவ சூழலுக்குள் இருக்கின்றன எனவும் தெரிவித்த அவர் அவற்றில் இரண்டு பாடசாலைகளை விடுவிக்க படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பலாலியில் உள்ள ஆசிரியர் பயிற்சி பாடசாலையை மட்டும் விடுவிக்க படையினர் மறுக்கின்றனர் எனத் தெரிவித்த அவர் அது தொடர்பாக கொழும்பு சென்று பேச்சுவார்த்தை நடத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய தமிழ் தின விழா இம்முறை யாழ். இந்துக் கல்லூரியில் எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.