குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
வடமாகாண பண்பாட்டு விழாவில் முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்ன என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எஸ்.சுகிர்தன் கேள்வி எழுப்பினார்.
வடமாகாண சபையின் 106ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அதன்போது, முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டமையால் பல கலைஞர்கள், எழுத்தாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், அதற்கான காரணம் என்ன? என்பதை மாகாண கல்வி அமைச்சர் வெளிப்படுத்தவேண்டும் என விசேட கவனயீர்ப்காக குறித்த கேள்வியை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண பண்பாட்டு விழா கந்த 22ம், 23ம், 24ம் திகதிகளில் நடைபெற்றிருக்கின்றது. இந்நிலையில் 21ம் திகதி நிகழ்வை பிற்போடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான காரணம் பண்பாட்டு விழாவில் முதலமைச்சர் விருது வழங்கப்படவிருந்தது. அந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள் தெரிவில் குறைபாடுகள் காணப்பட்டமையே என கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் முதலமைச்சர் விருதை பெறவிருந்த கலைஞர்கள் மற்றும் எ ழுத்தாளர்கள் பலர் ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள். இந்நடவடிக்கை மிக தறவானது. எனவே முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்ன? என்பதை வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரன் தெளிவான அறிக்கை ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என கேட்டு கொண்டார்.
எனினும் மேற்படி விசேட கவனயீர்ப்பு சபையில் சமர்பிக்கப்படுகையில் சபையில் கல்வி அமைச்சர் இருக்கவில்லை. இந்நிலையில் சபையில் கல்வி அமைச்சர் இல்லாமை தொடர்பாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியதுடன், கல்வி அமைச்சர் வருவார் இல்லையேல் இந்த வி டயம் அவருக்கு தெரியப்படுத்தப்படும் என கூறினார். மேலும் இக் கவனயீர்ப்புக்கு சபையில் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.