இலங்கையில் முதலாவது மும்மொழி தேசிய பாடசாலையின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 1200 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தப்பாடசாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலநறுவ மாவட்டத்தின் பிரதான நகரமான கதுறுவெல என்னுமிடத்தில் அமைக்கப்படவுள்ளது.
இலங்கையில் சிங்களம் , தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை உள்ளடக்கிய மும்மொழி கொள்கை பேணப்படுகின்றது. தரம் 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புகளை கொண்ட இந்தப் பாடசாலை அனைத்து வசதிகளையும் கொண்டாக அமைக்கப்படவுள்ளது.
2019ம் ஆண்டு முதற்கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் எண்ணக் கருவில் பல்லின, மும்மொழி பாடசாலையாக இந்த பாடசாலை விளங்கும் என ஜனாதிபதி செயலகத்தின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.