Home இலங்கை வித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் – நிலாந்தன்

வித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் – நிலாந்தன்

by admin

 
வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின்னரான ஒரு காலச்சூழலில் குறிப்பாக ஐ.நாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறுகால நீதிச் சூழலில் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் பாராட்டும் விதத்தில் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தமிழ் ஊடகங்களிலும், இணையப்பரப்பிலும் இத்தீர்ப்பு சிலாகித்து எழுதப்படுகிறது. வித்தியாவின் தாய்க்கு வழங்கிய வாக்குறுதியை அரசுத்தலைவர் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்துள் நிறைவேற்றியிருப்பதாக பாராட்டும் கிடைத்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் ஐந்து நாள் விஜயமாக இலங்கைக்கு வந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமேர்சன் அப்போதிருந்த நீதியமைச்சரைச் சந்தித்த போது கடுமையாக முரண்பட்டிருந்தார். சந்திப்பை  இடைநடுவில் முறித்துக்கொண்டு வெளியேறினார். அதன் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் சட்டமா அதிபரைப் பின்வருமாறு கடுமையாக விமர்சித்திருந்தார். ‘நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருக்கிறார்.  இது ஜனநாயக நீதித்துறையின் அடிப்படைத் தத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது. எந்தவொரு பிணை மனுவையும் நிராகரிக்கும் அதிகாரம் பெற்றவராக சட்டமா அதிபர் இருக்கிறார். இந்த நடைமுறை இன்னமும் சிறிலங்காவில் உள்ளது.’இவ்வாறான அனைத்துலக மட்டத்திலான விமர்சனங்களின் பின்னணியிலேயே மேற்படித் தீர்ப்பு வந்திருக்கிறது.

2015ம் ஆண்டு ஜெனீவாத் தீர்மானத்தின் போது அரசாங்கம் 25 பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டது. அவை யாவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கு அவசியமானவை என்று கருதப்படுகிறது. அவற்றுள் ஒரு பொறுப்பு ‘சட்ட ஆட்சியை நிலை நிறுத்தல் மற்றும் நீதி முறைகளில்  நம்பிக்கையைக் கட்டி எழுப்புதல்;;’  என்று கூறுகின்றது. மேற்படி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் இவ்வாண்டு ஜெனீவாவில் வழங்கப்பட்டிருக்கிறது. இக்கால அவகாசத்தின் பின்னணிக்குள்தான் மேற்படித் தீர்ப்பு வந்திருக்கிறது.

இதை ரணில் மைத்திரி அரசாங்கம் தனது அடைவுகளில் ஒன்றாகக் காட்டக்கூடும்;. தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் மீது நம்பத்தக்க விதத்தில் அக்கட்டமைப்பானது மறுசீரமைக்கப்படுகிறது என்ற ஒரு தோற்றத்தை இது உருவாக்கும். ஏற்கெனவே கடந்த மார்ச்மாத ஜெனிவாக் கூட்டத்தொடரிற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க அதைக் கூறிவிட்டார். ‘கலப்பு நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் உட்சேர்க்கப்பட்ட போது சிறிலங்காவின் நீதிச் சேவை மீது அனைத்துலக சமூகம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கமானது நாட்டின் நீதிச்சேவையை சுயாதீனமானதாக ஆக்கியுள்ளது. ஆகவே கலப்பு நீதிமன்றம் என்கின்ற கோரிக்கை தற்போது தேவையற்றதாகும்’

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் ஆட்சி மாற்றத்தின் பின் நீதிபரிபாலனக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது முன்னரைப் போல இப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீதிமன்றத் தீர்ப்புக்களை மாற்றிவிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இத்தகையதோர் பின்னணிக்குள் வித்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கும் நீதியானது இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதியின் அந்தஸ்தை உள்நாட்டளவிலும், உலக அரங்கிலும் உயர்த்துவதற்கு உதவக்கூடும். ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் இந்த நீதியின் வீச்செல்லை எதுவரை விரிந்து செல்லும்? என்பதே. ஏனெனில் வித்தியாவிற்கு 29 மாதங்களில் நீதி கிடைத்துவிட்டது. ஆனால், இசைப்பிரியாவிற்கும், அவரைப் போன்று போர்க்களத்தில் குதறி எறியப்பட்ட பெண்களுக்கும் எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் நீதி கிடைக்கவில்லை.

இசைப்பிரியா என்பது இங்கு ஒரு குறியீடுதான். அவரைப்போல இறுதிக்கட்டப் போரின் போதும் அதற்கு முன்பும் கைது செய்யப்பட்டபின் அல்லது சரணடைந்தபின் குதறி எறியப்பட்ட எல்லாப் பெண்களுக்கும் இசைப்பிரியா ஒரு குறியீடாகிறார். அவர் ஒரு இயக்கப் போராளி. அவர் கைது செய்யப்பட்ட பின் அல்லது சரணடைந்த பின் ஒரு போர்க் கைதியாகவே நடத்தப்பட்டிருந்திருக்க வேண்டும். போர்க் கைதிகளுக்குரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய அவர் விசாரிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த விசாரணைகளும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்கப் பெறும் ஒளிப்படங்கள், கானொளிகள் என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு நவீன யுத்தத்தில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போர்க்கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்போ, கௌரவமோ அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்றே தெரிகிறது. பண்டைய நாகரிகமடையாத காலங்களுக்குரிய யுத்தகளங்களின் போது தோற்கடிக்கப்பட்ட தரப்பின் பெண்கள் எப்படியெல்லாம் வேட்டையாடப்படுவார்களோ அப்படித்தான் அவரும் அவரைப் போன்ற பெண்களும்; விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்று கருதத்தக்க விதத்தில்தான் அக்காட்சிகள் அமைந்திருக்கின்றன. யுத்த களங்களில்; கைதிகளையும் சரணடைந்தவர்களையும் அவ்வாறு அவமதிப்பதற்கு பூமியில் உள்ள எந்தவொரு எழுதப்பட்ட சட்டமும் அனுமதிப்பதில்லை.

அக்காட்சிகளைப் படம் பிடித்தது தமிழ்த்தரப்பு அல்ல. அல்லது கடைசிக்கட்ட யுத்தத்தின் போது கள்ள மௌனம் சாதித்த சக்தி மிக்க நாடுகளின் செய்மதிக் கமராக்களுமல்ல. மாறாக போரில் வெற்றி கொண்ட தரப்பே தனது கைபேசிக் கமராக்களின் மூலமும், ஏனைய கமராக்களின் மூலமும் அப்படங்களை எடுத்திருக்கிறது. வெற்றிக்களிப்பில் நிதானமிழந்து தமது வெற்றிக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபிகளே இப்பொழுது அவர்களுக்கு எதிரான சாட்சியங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

அவ்வொளிப்படங்களிலும், கானொளிகளிலும் காணப்படும் பெண்களைப் பற்றியே இக்கட்டுரையில் எழுதப்படுகிறது. அவர்களில் அநேகமானவர்கள் ஆடைகளின்றிக் கிடக்கிறார்கள்.குருதி வடிந்துகாய்ந்த முகங்கள். அவர்களுடைய அவயவங்கள் குதறப்பட்டுள்ளன அல்லது சிதைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பின்னரும் அவர்களை ஆடைகளின்றி வரிசையாக அடுக்கி படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மிருகங்களின் உடல்களைத் தூக்கி எறிவது போல அவர்களுடைய நிர்வாண உடல்கள் வாகனங்களில் ஏறியப்படுகின்றன.

அவர்களில் ஒரு பகுதியினர் அவர்களுடைய அரசியல் நம்பிக்கைகளுக்காக ஆயுதமேந்தியவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு யுத்தகளத்தில் சரணடைந்த பின் அல்லது கைது செய்யப்பட்ட பின் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு மனித நாகரீகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய சட்ட ஏற்பாடுகள் உண்டு. ஆனால் அந்த சட்ட ஏற்பாடுகள் அனைத்திற்கும் முரணாகவே அவர்கள் நடாத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் நடாத்தப்பட்டதற்கு எதிராக யாரிடம் நீதி கேட்பது? வித்தியாவிற்கு வழங்கப்பட்டதைப் போல அவர்களுக்கும் நீதி வழங்கப்படுமா? நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் கீழ் அவர்களுக்கு நீதி வழங்கப்படுமா?

ஆனால் அரசாங்கத்தை ஆதரிக்கும் லிபரல் ஜனநாயக வாதிகளான ஜெகான் பெரேரா போன்றவர்களே பின்வருமாறு எழுதுகிறார்கள். ‘போர்க்குற்றங்களை மையமாகக்கொண்ட நிலைமாறுகால நீதிச் செய்முறை முன்னோக்கி நகரப் போவதில்லை என்பது இப்போது தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச விசாரணை மன்றம் அல்லது கலப்பு முறையிலான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலைமாறுகால நீதிக்கு எதிரானவர்களின் கரங்களையே பலப்படுத்துகிறது. சர்வதேச சமூகம் மற்றும் தமிழ் அரசியல் சமூகம் என்பவற்றின் சில பிரிவினரால் வலியுறுத்தப்படுவது போன்று நிலைமாறுகால நீதியின் மைய விவகாரமாக போர்க்குற்ற விசாரணையைக் கருதினால் நிலைமாறுகால நீதிக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதென்பது மேலும் சிரமமானதாகிவிடும்’;

அதாவது நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்குள் குற்றவிசாரணை என்ற பகுதியை நீக்கிவிடவே அரசாங்கம் முயன்று வருகிறது. உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றுக்கூடாகவே அந்த விசாரணைகளைச் செய்யலாம் என்று உலக சமூகத்தை நம்ப வைக்க முயற்சிக்கிறது. வித்தியாவிற்கு வழங்கப்பட்ட நீதியானது நீதிபரிபாலனக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உயர்த்த உதவும். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் ஏற்கெனவே கிருசாந்தி வழக்கிலும், விஸ்வமடு வழக்கிலும் துணிச்சலான தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறார். ஆனால் இது போன்ற தீர்ப்புக்களை சில நீதிபதிகளின் தனிப்பட்ட அறமாகவே பார்க்க வேண்டும். அவர்கள் சார்ந்த ஒரு கட்டமைப்பின் கொள்கை முடிவாக பார்க்க முடியாது. ஏனெனில் குமரபுரம் படுகொலை வழக்கில் தீர்ப்பு எப்படி அமைந்தது என்பதனை இங்கு சுட்டிக்காட்டலாம். அதாவது சில நீதிபதிகளின் தனிப்பட்ட நீதியை ஒரு கட்டமைப்பின் நீதியாகக் கருத முடியாது.

ஆட்சி மாற்றத்தின் பின் ரணில் – மைத்திரி அரசாங்கம் குறிப்பிட்ட சில வழக்குகளை வேகப்படுத்தி தீர்ப்புக்களை வழங்கி வருகிறது. இதில் பெரும் பகுதி வழக்குகள் ராஜபக்ஷ அணிக்கு எதிரானவை. அவை கூட போர்க்குற்றம் சம்பந்தப்பட்டவை அல்ல. பதிலாக அதிகார துஷ;பிரயோகம், ஊழல் போன்றவற்றோடு தொடர்புடையவை. அதே சமயம் சில பிரமுகர்களின் படுகொலை வழக்குகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றிலும் கூட ராஜபக்ஷ அணியோடு நெருங்கிச் செயற்பட்ட தமிழ் மற்றும் சிங்களத் தரப்புக்களே தண்டிக்கப்பட்டுள்ளன. எனவே ஆட்சி மாற்றத்தின் பின் வழங்கப்பட்ட தீர்ப்புக்களில் பெரும்பாலானவை சிங்கள பௌத்த கூட்டு உளவியலை அச்சுறுத்தாத தீர்ப்புக்களே.

ஆனால் போர்க்குற்ற விசாரணைகள் அப்படிப்பட்டவையல்ல. முழு நிறைவான விசாரணைகள் நடத்தப்படுமாக இருந்தால் சாட்சிகளுக்கு முழு நிறைவான பாதுகாப்பு வழங்கப்படுமாகவிருந்தால் நிலமை எப்படி அமையும்? இன்று தென்னிலங்கையில் வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்படும் பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும். வெளிநாட்டுத் தூதுவர்களாக ராஜதந்திர அந்தஸ்து வழங்கப்பட்ட பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டியிருக்கும். அவ்வாறான விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் நிச்சயமாக சிங்கள பௌத்த கூட்டு உளவியலை பீதிக்குள்ளாக்கக் கூடியவை என்பதனால்தான் அரசுத் தலைவர் சிறிசேன படைத்தரப்பைச் சேர்ந்த யாரையுமே தான் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று அண்மையில் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

எனவே இசைப்பிரியாக்களுக்கு நீதி கிடைப்பது என்று சொன்னால் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் அடிச்சட்டமாக இருக்கும் சிங்கள பௌத்த கூட்டு மனோ நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அரசறிவியலின் ஆரம்பப் பாடங்களின் படி ஒர் அரசை மூன்று அலகுகள் கட்டியெழுப்புகின்றன. முதலாவது சட்டவாக்க சபை. அதாவது மக்கள் பிரதிநிதிகளின் சபை. இரண்டாவது பாதுகாப்புக் கட்டமைப்பு, மூன்றாவது நீதிபரிபாலனக் கட்டமைப்பு. ஓர் அரசை உருவாக்கும் இவ் மூன்று மூலக்கூறுகளும் அவ்வரசின் கொள்கைகளைப் பாதுகாப்பவை. இலங்கைத் தீவின் அரசு எனப்படுவது அதன் இயல்பில் ஒரு சிங்கள பௌத்த அரசு. எனவே சிங்கள பௌத்த கூட்டு உளவியலை பாதுகாப்பதே அதன் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் பணியாகும். இப்படிப் பார்த்தால் அக்கூட்டு  உளவியலில் மாற்றம் ஏற்படும் பொழுதே இசைப்பிரியாக்களுக்கு நீதி கிடைக்கும்.

அக்கூட்டு உளவியலில் மாற்றம் ஏற்படுவது என்றால் அது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும். அக்குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதற்கு புத்த பகவானையே துணைக்கழைக்கலாம். சிங்கள பௌத்த பண்பாடு எனப்படுவது மூத்தோரை, பெரியோரை மதிக்கும் இயல்புடையது. அதிகாலையில் வீட்டிலுள்ள மூத்தவர்களை காலைத் தொட்டு வணங்கி விட்டு வேலைக்குச் செல்லும் ஒரு சமூகம் அது. அந்தச் சமூகத்திலிருந்து வந்த ஒரு பகுதியினர் தான் இசைப்பிரியாக்களை குதறியபின் ஆடைகளின்றி வன்னி கிழக்குத் தரவைகளில் வீசியெறிந்தார்கள். பின்னர் அதைப் படமும் எடுத்தார்கள். அந்தப் படங்களை அவர்கள் யாருக்கு காட்டுவதற்காக எடுத்தார்கள்? அதை அவர்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கோ, காதலியர்களுக்கோ சகோதரிகளிற்கோ இதுதான் எமது வீரம் என்று கூறிக் காட்ட முடியுமா? காலையில் காலைத் தொட்டு வணங்கிய தாய்க்கும், தந்தைக்கும், தாத்தாவிற்கும், பாட்டிக்கும் காட்ட முடியுமா? அப்படி யாருக்கும் காட்ட முடியாதென்றால் எதற்காக அந்தப் படங்களை எடுத்தார்கள்? பௌத்த தர்மத்தின் கர்மக் கோட்பாடு அவர்களை உந்தித்தள்ளியிருக்குமோ? கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு நாடு.?

ஆனால் இது விடயத்தில் சிங்கள பௌத்த கூட்டு உளவியலின் குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதற்கு தமிழ், சிங்கள அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் போதியளவு உழைத்திருக்கவில்லை. ஆன்மீகவாதிகளும், மதப்பெரியார்களும் போதியளவு செயற்படவில்லை. புத்திஜீவிகளும், கருத்துருவாக்கிகளும், ஊடகவியலாளர்களும், படைப்பாளிகளும் போதியளவு செயற்படவில்லை. நிலைமாறுகால நீதியை காசு காய்க்கும் மரமாகக் கருதும் என்.ஜி.யோக்கள் அதைச் செய்யப் போவதில்லை. ஓர் அரசுடைய தரப்பின் குற்றங்களை அரச தரப்பாகிய தமிழ்த்தரப்பு இழைத்திருக்கக்கூடிய குற்றங்களோடு சமப்படுத்த விளையும் எவரும் அப்படி ஒரு குற்றவுணர்ச்சியைத் தூண்ட முடியாதவர்களும், தூண்டுவதில் ஆர்வமற்றவர்களும்தான்.

இசைப்பிரியாக்கள் குதறி எறியப்பட்ட ஒளிப்படங்கள் சிங்கள பௌத்த கூட்டு உளவியலின்; குற்ற உணர்ச்சியை நொதிக்க வைப்பதற்கு மிகப் பொருத்தமானவை. சிங்கள  பௌத்த பண்பாட்டை அவை எப்பொழுதும் குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்பவை. ஓஷேh கூறுவது போல குழுமனோநிலையில் இருந்து செய்யும் பொழுது சில செயல்கள்  குற்றங்களாகத் தெரிவதில்லை. அதற்கு ஒரு கூட்டு நியாயம் கற்பிக்கப்படும். ஆனால் அதையே தனியே இருந்து சிந்திக்கும் போது  மனச்சாட்சி வேலை செய்யத் தொடங்கும். குற்ற உணர்ச்சி மேலெழும்.திருமதி சந்திரிகாவின் மகன் சனல் நாலு வெளியிட்ட படத்தைப் பார்த்து விட்டு வெட்கப்பட்டதாகக் கூறப்படுவதை இங்கு சுட்டிக்காட்டலாம்.

இவ்வாறு ஒரு கூட்டுக் குற்றவுணர்ச்சியைத் தூண்டினால் மட்டுமே இலங்கைத் தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை தலைகீழாக மாற்றலாம். அப்பொழுதுதான் இசைப்பிரியாக்களுக்கும், கோணேஸ்வரிகளுக்கும் உரிய நீதி கிடைக்கும். இனப்படுகொலைகளுக்கு எதிரான நீதியும் கிடைக்கும். அது மட்டுமல்ல. இனப்பிரச்சினைக்கான முழு நிறைவான ஒரு தீர்வைக் காண்பதற்கு அது இன்றியமையாத  ஒரு முன் நிபந்தனையுமாகும்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More