குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு முதலமைச்சர் வடமாகாண மக்களின் ஆதரவை அன்பை பெற்று உள்ளார், அதானல்தான் கூட்டமைப்பினர் அவரை விமர்சிக்கின்றனர் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பணத்திற்கு சென்றுள்ள பசில் ராஜபக்ச இன்றைய தினம் மதியம் யாழ்.ஊடக அமையத்தில் ஊடவியலாளர்களை சந்தித்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கின் வசந்த திட்டங்கள் ஊடாக அபிவிருத்தி , விவசாய ஊக்குவிப்பு , மீன் பிடி ஊக்குவிப்பு போன்ற பல அபிவிருத்திகளை மேற்கொண்டு மக்கள் சுவீட்சமாக வழி சமைத்தோம். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியது முன்னாள் ஜனாதிபதி தான். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 33 மாதங்கள் கடந்தும் இந்த புதிய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. எமது ஆட்சி காலத்தில் தான் வெடிபொருட்களை அகற்றி மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை ஏற்படுத்தி கொடுத்தோம்.
இடம்பெயர்ந்த மக்களை நாம் மீள்குடியேற்றினாம். நாம் தொடர்ந்து மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம்.. காணியற்றவர்களுக்கு கூட காணிவழங்க தயாராக இருந்தோம். அதேபோல காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்போம்.
புதிய அரசாங்கம் மீள்குடியேற்றத்தை ஒழுங்காக செய்யவில்லை இந்திய மீனவர்களை தடுத்து எமது மீனவர்கள் பாதுகாக்க கூட இந்த அரசாங்கத்தால் முடியவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சனைகள் , தேவைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கவனிக்கவில்லை. இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனை , தேவைகளை கேட்டறியவே நமது கட்சி மக்கள் சந்திப்புக்களை தற்போது நடாத்தி வருகின்றது.
வடக்கு முதலமைச்சர் வடமாகாண மக்களின் ஆதரவை அன்பை பெற்று உள்ளார் அதானல தான் கூட்டமைப்பினர் அவரை விமர்சிக்கின்றனர். என நினைக்கிறேன் என தெரிவித்தார்.