குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் சின்னப்பல்லவராயன்கட்டுக் கிராமத்தில் நூற்றுக்கணக்கான தென்னைகள் தீயில் கருகியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் இப்பகுதியில் தென்னம் பண்ணை உருவாக்கப்பட்டது. பாதுகாப்பான வேலிகள் உருவாக்கப்பட்டு தென்னைகள் செழிப்பாக வளர்ந்து வந்தன. போர் இடம் பெயர்வுகள் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் இருந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடமுருட்டிக் குளத்தின் கீழான வயல் நிலங்களில் குடியிருந்த ஐம்பது வரையான குடும்பங்களுக்கு இத்தென்னைப் பண்ணைக் காணியில் இருபத்தைந்து ஏக்கரும் , இராணுவத்தினருக்கு நூறு ஏக்கரும் பூநகரிப் பிரதேச செயலகம் ஊடாக கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டன.
இத்தென்னம் பண்ணைக்கு 2009ஆம் ஆண்டின் பின்னர் பராமரிப்பவர்கள் எவரும் இல்லாததன் காரணமாக அடிக்கடி தீ மூட்டப்படுவதன் காரணமாக தென்னை மரங்கள் தீயில் கருகுகின்ற நிலைமை காணப்படுகின்றது.
வடமாகாண விவசாய தென்னைப் பயிர்ச்செய்கை சபை ஊடாக இத் தென்னம் பண்ணையினை பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக இப்பகுதி பொது அமைப்புகளினால் விடுக்கப்படுகின்ற போதிலும் இதுவரை இத்தென்னம் பண்ணைக் காணி பொறுப்பேற்கப்படவில்லை.
தென்னைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இக்காணியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாளர்களும் பணியில் ஈடுபடுகின்றனர். பொது மக்கள் இராணுவத்தினரே தென்னைக் காணிக்கு தீ மூட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தென்னைக் காணியினை சுற்று அடைக்கப்பட்டிருந்த சீமெந்துத் தூண்கள், முட்கம்பி வேலிகள் அனைத்தும் இராணுவத்தினரால் கழற்றப்பட்டு தற்போது சின்னப்பல்லவராயன்கட்டுச் சந்தியில் அமைத்துள்ள படை முகாமை பலப்படுத்துவதற்கு பயன்படுத்தியுள்ளனர். குடமுருட்டிக் குளத்தினைப் புனரமைப்பதற்கு குவிக்கப்பட்ட கற்கள் கூட படை முகாமின் மதில் அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
தென்னைகளை அழிப்பதில் இராணுவத்தினர் குறியாக உள்ள நிலையில் வடமாகாண விவசாய அமைச்சு குறித்த காணியினைப் பொறுப்பேற்க வேண்டும். இல்லையேல் தென்னைகள் அழிவதற்கு வடமாகாண விவசாய அமைச்சும் பொறுப்பேற்க வேண்டும். சுமார் நூற்றைம்பது ஏக்கரில் தென்னை மரங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.