ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு நிறைந்த இப்பகுதியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் தீவிரவாதிகள் திடீரென ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் எல்லை பாதுகாப்பு படை வளாகத்தை விட்டு தீவிரவாதிகள் வெளியேற முடியாத வகையில், அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் அருகில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளதுடன் காலையில் செல்லவேண்டிய அனைத்து விமானங்களும் ரத்துசெய்யப்பட்டன. பாதுகாப்பு அனுமதி தொடர்பான மறு உத்தரவு வரும் வரை விமானங்கள் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பயணிகள் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.