குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து பிரித்தானியாவுடன் இடம்பெறவுள்ள இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்துவது குறித்த தீர்மானமொன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டவேளை அதற்கு ஆதரவாக 557 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம் தற்போதைய பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆதரவு வழங்கியுள்ளது
பிரித்தானிய அரசாங்கத்திற்குள் காணப்படும் பல்வேறு விதமான நிலைப்பாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படுவதாக ஐரோப்பி யஓன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவிற்கே முதலிடம் என்ற தனது நிலைப்பாட்டை தெரேசா மே கைவிடவேண்டும் எனவும் தனது அரசாங்கத்திற்குள் காணப்படும் நெருக்கடிகளிற்கு அவர் தீர்வை காணவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது பல உறுப்பினர்கள் பிரித்தானியாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர்.
லண்டனில் யாரை நான் தொடர்புகொள்வது தெரேசா மேயை தொடர்புகொள்வதா அல்லது பொறிஸ் ஜோன்சனை தொடர்புகொள்வதா என ஜேர்மனியை சேர்ந்த உறுப்பினர் ஓருவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானியாவின் ; நிலைப்பாட்டிற்கு யார் பொறுப்பு என்பது குறித்து எங்களிற்கு தெரியவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.